/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை உழவால் சோடை போகாது விவசாயம்
/
கோடை உழவால் சோடை போகாது விவசாயம்
ADDED : ஜூன் 26, 2024 10:45 PM

திருப்பூர் : அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி வட்டாரங்களில் தென்மேற்கு பருவமழையை நம்பி சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி, மானாவாரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.
'சாகுபடிக்கு முன் கோடை உழவு செய்ய வேண்டும்' என, வேளாண் துறை அறிவுறுத்துகிறது.ஊத்துக்குளி வட்டாரம் குன்னத்துார், குறிச்சி கிராமத்தில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் மானியத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கோடை உழவுப்பணியை, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், உதவி வேளாண் அலுவலர் சத்தியவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.அரசப்பன் கூறியதாவது:
சாகுபடிக்கு முன் மண்ணை வளப்படுத்த வேண்டும்; பின், உழவு செய்ய வேண்டும். கிடைக்கபெறும் முதல் அல்லது இரண்டாவது மழையை பயன்படுத்தி, தரிசாக கிடைக்கும் மண்ணை கட்டாயம் உழவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் வாயிலாக மண்ணில் உள்ள இறுக்கம் தளர்ந்து, காற்றும், நீரும் நிலத்துக்குள் செல்லும்.
மண்ணுக்கு நன்மை பயக்கும் பூச்சியினங்கள் பல்கிப்பெருகும்; இதனால், மண் வளம் மேம்படும். மண்ணில் உள்ள களைகள் கட்டுப்படுத்தப்படுவதன் வாயிலாக, மண்ணின் அடியில் தங்கியுள்ள கூட்டுப்புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு, அவை அழிக்கப்படுகின்றன.
பூச்சித்தாக்குதல் குறைந்து, பயிர் விளைச்சல் அதிகரிக்கும். தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் வாயிலாக, கோடை உழவு செய்ய எக்டருக்கு, 2,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது; விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.