/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளியுங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
/
பள்ளி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளியுங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பள்ளி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளியுங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பள்ளி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளியுங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 07, 2025 10:32 PM
உடுமலை; அரசுப்பள்ளிகளில் வெளிநபர்களால், சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா அமைக்க, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஸ்மார்ட் வகுப்பறை உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசுப்பள்ளிகளில், பொருட்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, இரவு காவலர்கள் நியமிக்க வேண்டும் என, பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கென பாதுகாவலர் இல்லாததால், விடுமுறை நாட்களில் பள்ளிகளில் அத்துமீறி வெளிநபர்கள் செல்வது தொடர்ந்து நடக்கிறது. பல கிராமப்புற பள்ளிகளில், அப்பகுதிகளை சேர்ந்தவர்களே விதிமுறை மீறி, பள்ளி வளாகத்துக்குள் விளையாடுவதற்கு செல்கின்றனர்.
விளையாடுவதற்கு மட்டுமே பள்ளி வளாகத்தை பயன்படுத்தாமல், வகுப்பறை சுவர்களை அசுத்தமாக்குவது, மதுபாட்டில்களை உடைத்து வீசிச்செல்வது, கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு அசுத்தமாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பள்ளிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் வாயிலாக, பல வழிகளிலும், பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, பள்ளியின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த, கண்காணிப்பு கேமரா பள்ளிகளில் அவசிய தேவையாக மாறியுள்ளது. சில அரசுப்பள்ளிகளில் தன்னார்வல அமைப்புகளின் வாயிலாக, இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு, அரசு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு, கண்காணிப்பு கேமரா முதன்மையான தேவையாக உள்ளது. தற்போது ஸ்மார்ட் வகுப்பறைக்கான தொழில்நுட்ப உபகரணங்களும் பள்ளியில் இருப்பதால் பள்ளி பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.
அரசின் சார்பில் இதற்கான நிதிஒதுக்கீடு வழங்கினால், அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் சாத்தியமாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தமிழக அரசும் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.