/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாக்கடை அடைப்புகள் அகற்ற மாநகராட்சி தீவிரம்
/
சாக்கடை அடைப்புகள் அகற்ற மாநகராட்சி தீவிரம்
ADDED : ஆக 19, 2024 12:06 AM
திருப்பூர்;திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் அதிகளவில் அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மழை நாட்களில் வடிகால்களில் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வது சகஜமாக உள்ளது.
பல்வேறு பகுதிகளில் மழை நீரும், சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து ரோட்டில் சென்று பாய்வதும், போக்குவரத்து அவதியும், சிறு விபத்துகளும் ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது.
தற்போது மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் 42வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள்; திறந்த நிலை சாக்கடை கால்வாய்கள் ஆகியவற்றில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும், அடைப்புகளை சரிசெய்து, கழிவு நீர் தேங்காமல் செல்லவும் நடவடிக்கை எடுக்க, கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கோரிக்கை விடுத்தார்.
அதையடுத்து இப்பணிக்கான அடைப்பு நீக்கும் வாகனம் மங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகள் சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களும் துார் வாரி சுத்தம் செய்யும் வகையில், பணிகள் துவங்கியுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்வரும் மழை நாட்களில் இப்பகுதியில் மழை நீர் எங்கும் தேங்காமலும், கழிவு நீருடன் சேர்ந்து வெளியேறாமலும் தடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.