/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பால் 'தடை' பாதையான நடைபாதை!
/
ஆக்கிரமிப்பால் 'தடை' பாதையான நடைபாதை!
ADDED : மார் 06, 2025 06:25 AM

திருப்பூர்; காங்கயம் ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் முளைத்துள்ள நிலையில், ரோட்டில் வைக்கப் பட்டிருந்த கடைகளின் பெயர் பலகையை மட்டும் அதிகாரிகள் அப்புறப்படுத்தியது, பாதசாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருப்பூர் நகரின் பிரதான ரோடான காங்கயம் ரோட்டில், தினமும் நுாற்றுக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கின்றன. இதில், கோட்டை மாரியம்மன் கோவில் துவங்கி,சி.டி.சி., கார்னர் வரை, பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை முழுக்க ஆக்கிரமிப்பு கடைகளால் நிரம்பியுள்ளன.
தள்ளுவண்டி கடைகள் துவங்கி, நிரந்தமாக வைக்கப்பட்டுள்ள கடைகள் வரை, நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தவே முடியாது என்ற நிலைதான் உள்ளது.நடைபாதையை ஒட்டிய ரோட்டில், கடைக்காரர்கள் தங்கள் வாகனங்களை 'பார்க்கிங்' செய்து, கடைகளின் பெயர் பலகையை வைத்துக் கொள்வது, என ரோட்டையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை, மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அறிவித்தனர். கடைக்கு முன் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகையை மட்டும் அப்புறப்படுத்தினர்.
அடையாள அட்டைக்கு அர்த்தமென்ன?
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
நகரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஆக்கிரமிப்புகள் தான், காங்கயம் ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு, சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், அதன் வாயிலாக வங்கிக்கடன் உள்ளிட்ட அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவும், அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி, தகுதியுள்ள வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், சாலையோர வியாபாரிகள் கடை அமைத்துக் கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நடைபாதை கடைகளை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள கடைக்காரர்களுக்கு மாற்றிடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.