/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியின் காவல் தெய்வம் ஆகாசராய சுவாமி
/
அவிநாசியின் காவல் தெய்வம் ஆகாசராய சுவாமி
ADDED : ஆக 16, 2024 12:17 AM

அவிநாசியில் காவல் தெய்வமாக மங்கலம் ரோட்டில், வேலாயுதம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஆகாசராய சுவாமி. அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தோன்றிய காலத்தில் இருந்தே அருள்பாலித்து வருவது கூடுதல் சிறப்பு.
கோவில் தலவரலாறு
ஊழிக்காலத்தில் சிவபெருமான் சங்கார தாண்டவம் என்னும் பிரளய தாண்டவத்தை செய்து பின் அக்னி தாண்டவம் ஆடுகிறார். அப்போது உமா தேவியரை பிரிந்து இருக்க ஆணையிட்டு தாண்டவத்தை முடித்து அம்மையாரின் பிரிவாற்றாமை கண்டு, மனமிரங்கி அம்மனை இடப்பாகத்திலே அமர்த்திக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழிலையும் செய்தார்.
உமா தேவியார் சிவபெருமானிடம் சுத்த சங்கார தாண்டவத்தில் பிரிந்து இருக்க சில நாட்கள் தவம் புரிய இறைவனிடம் வேண்டிய போது, திருமால், பிரம்மன், இந்திரன், முப்பத்து முக்கோடி தேவர்கள் யாவரும் புக்கு ஒளிந்த தென்திசையில் உள்ள திருப்புக்கொளியூர் என்னும் அவிநாசி திருத்தலத்தில் தவம் செய்யுமாறு அருளுகிறார்.
அதனால் உமா தேவியார் இறைவனிடம் விடைபெற்று தென் திசை நோக்கி தவம் செய்ய புறப்படுகிறார். மகிழ், செண்பகம், கொன்றை, பாதிரி, மந்தாரம், பஞ்ச வில்வம், மா முதலிய மரங்கள் பூத்து விளங்கும் திருப்புக்கொளியூரில் ஒரு மா மரத்தின் கீழ் உமா தேவியார் தவம் புரிகின்றார்.
காக்கும் தெய்வம்
தன் தவத்திற்கு எந்த இடையூறும் வராமல் காக்க தன் மகனைப் போன்று ஒருவர் வேண்டும் என எண்ணி மண்ணிலும் ஆகாசத்திலும் பலம் பொருந்திய சக்தி வாய்ந்த பாலகனாக ஸ்ரீ ஆகாச ராயரை சகல சக்தியும் கொடுத்து உமா தேவியர் படைத்தருளுகிறார்.
அந்த ஆகாசராயரே விண்ணிலும் மண்ணிலும் இடையூறு வராமல் ஊருக்கு தென்மேற்கு திசையில் அமர்ந்து மக்களை காத்தருளுகிறார். தவம் முடிந்த உமாதேவியார் ஆகாசராயருக்கு இந்தப் புண்ணிய தலத்திலிருந்து அருள்பாலித்து மக்களை காக்க வேண்டும் என ஆணையிடுகிறார்.
அன்றிலிருந்து இன்றும், என்றென்றும் ஆகாசராயர் மக்களை காத்து அருள் பாலித்து வருகிறார். திருப்புக்கொளியூர் என்று தோன்றியதோ அன்றே ஆகாசராயர் கோவிலும் தோன்றியது. இக்கோயில் மிகப் பழமையானதும், முக்காலத்திற்கும் முற்பட்டது.
ராயர்களில் ஆகாச ராயர், கருப்பராயர், செங்காளி ராயர், உத்தண்டராயர், வீரராயர், சங்கிலி கருப்பண்ண ராயர், மலைக்காத்த ராயர் (ஆதிவாசிகள் வழிபடும் தெய்வம்) ஆனந்த சிவக்கூத்தராயர் ஆகிய 8 ராயர்களில் முதன்மையாக விளங்குபவர் ஆகாசராயர் எனப் போற்றப்படும் அவிநாசியில் எழுந்தருளியுள்ளவராவார்.
சுவாமியின் சிறப்பு
நவக்கிரகங்களையும் தடுத்து ஆளக்கூடிய வல்லமை பெற்றவராக விளங்குகிறார். ஈசனால் கஜை என்ற ஆயுதத்தை பெற்றதால் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் புரியும் ஈசனின் அம்சமாக ஆகாசராயர் இங்கு விளங்குகிறார். அந்த வகையில் சுவாமி தோன்றிய காரணத்தால் சத்ரு சம்ஹார மூர்த்தியாக திகழ்கிறார்.
பிரம்மச்சரியத்தில் இருப்பதால் அனைத்து தோஷங்களையும், பரிகாரம் செய்யக்கூடிய வல்லமையாக ஆகாசராயர் விளங்குகிறார். சுவாமி அஷ்டதிக்கும், ஆகாசமும் பலம் பொருந்தில் பாலகன் என்ற திருநாமத்தை ஈசனால் பெறுகிறார்.
இதனால் அஷ்டமச்சனி, ஏழரைச் சனி நடப்பவர்கள் சுவாமியின் பரிகாரமாகிய கட்டு நீர், ஏக நீர் எடுத்து மற்றும் செவ்வாய் மகா திசை நடப்பவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள் தாயத்து வாங்கி அணிந்து அனுக்கிரகம் பெறலாம்.
திருப்பணி தீவிரம்
தற்போது கோவிலில் மஹா கும்பாபிஷேகத்திற்காக மராமத்து திருப்பணிகள், நடைபெற்று வருகிறது. அதில், கோவிலின் நுழைவாயிலில் மிகப்பிரமாண்டமாக இருபது அடி உயரத்தில் மகா முனி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில், காவல் தெய்வமான மகா முனியின் கைகளில் வைத்திருக்கும் கொடுவாளும் ஈட்டியும் மிக பிரம்மாண்டமாக இரும்பில் வார்த்துள்ளனர். ஏறத்தாழ, 30 கிலோ எடையும் ஒன்பது அடி உயரத்தில் கொடுவாளும், 10 கிலோ எடையில் ஒன்பது அடி உயரத்தில் ஈட்டியும் செய்துள்ளனர்.
மகாமுனியின் கைகளில் வைப்பதற்காக கொடுவாளையும், ஈட்டியையும் அதே பகுதியில் வசிக்கும் சமையல் கலைஞரான சந்திரன் என்பவர் உபயம் செய்துள்ளார்.
அஷ்டமச்சனி, ஏழரைச் சனி நடப்பவர்கள் சுவாமியின் பரிகாரமாகிய கட்டு நீர், ஏக நீர் எடுத்து மற்றும் செவ்வாய் மகா திசை நடப்பவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள் தாயத்து வாங்கி அணிந்து அனுக்கிரகம் பெறலாம்

