/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் வரத்தால் அதிகரிக்கும் திருமூர்த்தி நீர்மட்டம் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் திட்டம் நிறுத்தம்
/
நீர் வரத்தால் அதிகரிக்கும் திருமூர்த்தி நீர்மட்டம் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் திட்டம் நிறுத்தம்
நீர் வரத்தால் அதிகரிக்கும் திருமூர்த்தி நீர்மட்டம் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் திட்டம் நிறுத்தம்
நீர் வரத்தால் அதிகரிக்கும் திருமூர்த்தி நீர்மட்டம் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் திட்டம் நிறுத்தம்
ADDED : ஆக 09, 2024 02:48 AM
உடுமலை;திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்ந்ததால், விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு, 21,900 கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, நீர் நிலைகளில் கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், விவசாய விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், உடுமலை திருமூர்த்தி அணையில், 4 சர்வே எண்களில், ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளித்தது.
ஆனால், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் போது, 30 ஆயிரம் கனமீட்டர் அனுமதி வழங்கிய ஒரு சர்வே எண் மட்டுமே, இருந்ததால், விவசாயிகள் விண்ணப்பித்தனர்.
அதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, கடந்த ஜூலை, 12 முதல், திருமூர்த்தி அணையில் மண் எடுக்கும் பணி துவங்கியது. தொடர்ந்து பெய்த, தென் மேற்கு பருவ மழை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் மண் எடுக்கவில்லை.
இந்நிலையில், தற்போது திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வந்து சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
நீர்வரத்து காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அணையில் வண்டல் மண் எடுக்க, டிராக்டர், லாரிகள் செல்ல முடியவில்லை.
இதனால், நேற்று முன்தினம் மதியம் முதல், அணையில் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, நடப்பாண்டு வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு, 21 ஆயிரத்து, 900 கன மீட்டர் மண், 56 விவசாயிகள் எடுத்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளில், 60 ஆயிரம் கன மீட்டர் வரை மண் எடுக்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேங்கியதால், அணையில் நீர் சேமிக்கும் திறன், 300 மில்லியன் கனஅடி வரை குறைந்துள்ளது. இதே போல், ஆண்டு தோறும், வண்டல் மண் எடுத்து துார்வாரினால், ஒரு சில ஆண்டுகளில் இழந்த நீர் தேங்கும் திறனை அதிகரிக்க முடியும்,' என்றனர்.