/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீரமைக்காத ஆள் இறங்கு குழியின் மூடி; விபத்துகள் ஏற்படும் அபாயம்
/
சீரமைக்காத ஆள் இறங்கு குழியின் மூடி; விபத்துகள் ஏற்படும் அபாயம்
சீரமைக்காத ஆள் இறங்கு குழியின் மூடி; விபத்துகள் ஏற்படும் அபாயம்
சீரமைக்காத ஆள் இறங்கு குழியின் மூடி; விபத்துகள் ஏற்படும் அபாயம்
ADDED : பிப் 15, 2025 06:58 AM

உடுமலை; உடுமலை நகரில், சிதிலமடைந்த பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகளை சீரமைக்காமல் இருப்பதால், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
உடுமலை நகரில், 2015ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, இணைப்புகள் வழங்கப்பட்டது.
தனித்தனி பகுதிகளிலிருந்து கழிவுநீர் செல்வதற்கான இணைப்பு வழங்கப்பட்டு, மையப்பகுதியில் அனைத்தும் ஒருங்கிணைத்து கழிவுநீர் கொண்டுசெல்லப்படுகிறது.
இவற்றில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்வதற்கு, ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு மூடிகள் போடப்பட்டுள்ளன.தற்போது அந்த குழிகளின் மூடிகள் பராமரிப்பில்லாமல் உள்ளன.
உடுமலை பசுபதி வீதி நால்ரோடு சந்திப்பு அருகே, பல நாட்களாக ஆள் இறங்கு குழியின் மூடி உடையும் நிலையில் உள்ளது. வாகன ஓட்டுநர்கள் அதை அறியாமல் அதன் மீது வாகனத்தை ஏற்றும் போது தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
இவ்வாறு பல பகுதிகளிலும், ஆள் இறங்கு குழிகள் சிதிலமடைந்து, இடிந்து, ரோட்டிலிருந்து உள்இறங்கியும், மூடிகள் உடைந்தும், பழுதான நிலையிலும் மோசமாக உள்ளது.
உடுமலை பழநிரோடு, ராஜேந்திரா ரோடு, சரவணா வீதிகளில் குழிகளின் மூடிகள் மிகவும் மோசமான நிலையில் இடிந்துள்ளன. சில பகுதிகளில் அவற்றை சுற்றியுள்ள ரோடு பகுதிகளும் இடிந்து உள் இறங்கி உள்ளது.
இரவு நேரங்களில், வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவால் தடுமாறுகின்றனர். புதிதாக ரோடு போடப்பட்டுள்ள பகுதிகளில், இக்குழிகள் இருப்பதை கண்டறிய முடியாத வகையில், எந்த அடையாளமும் இல்லாமல் உள்ளன.
ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் சில இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ரோடுகள் அதற்கு ஏற்ப சமன்படுத்தப்படுவதில்லை.
விபத்துகள் உயிர் பழியாக மாறும் முன்பு, நகராட்சி நிர்வாகம் நகரம் முழுவதும் இக்குழிகளின் மூடிகளை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

