/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை ஓட்டுப்பதிவு; 1 0 ஆயிரம் ஊழியர்கள் தயார்
/
நாளை ஓட்டுப்பதிவு; 1 0 ஆயிரம் ஊழியர்கள் தயார்
ADDED : ஏப் 18, 2024 04:06 AM

திருப்பூர் : லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. திருப்பூர் லோக்சபா தொகுதியில், 10 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய ஆறு சட்டசபை உள்ளன. ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுகிறது.
மொத்தம் 13 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆண்கள் 7 லட்சத்து 91 ஆயிரத்து 19; பெண்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 250; திருநங்கைகள் 252 பேர் என, மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர்களின் விரலில், திருப்பூர் வேட்பாளர்களின் தலையெழுத்து உள்ளது.
ஆறு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 1,745 ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கிய, 695 ஓட்டச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம், பேன், குடிநீர், டேபிள், சேர், மாற்றுத்திறனாளிகள் வந்துசெல்ல ஏதுவாக சாய்தளம், சக்கர நாற்காலி உள்பட ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
தேவையைவிட 10 சதவீதம் கூடுதலாக 2,081 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் ஷீட் பொருத்தப்பட்டும்; 20 சதவீதம் கூடுதலாக 2,255 வி.வி., பேட்களில் சின்னங்கள், காகித ரோல் வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பதிவு படிவம், பென்சில், ரப்பர் ஸ்டாம்ப் உள்பட ஸ்டேஷனரி பொருட்கள், வாக்காளர் விரலில் வைக்கப்படும் அழியாத மை, ஓட்டுப்பதிவு செய்யும் இடத்தில் வைக்கப்படும் மறைவு அட்டை உள்பட ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தேவயான 80 க்கும் மேற்பட்ட தேர்தல் பொருட்கள், தனித்தனியே பைகளில் அடைக்கப்பட்டுள்ளன.
சராசரியாக பத்து ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கி ஒரு மண்டலம் என்கிற அடிப்படையில், தொகுதியில் மொத்தம் 158 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும், துணை தாசில்தார் நிலையிலான அதிகாரி மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு இன்று கொண்டுசென்று சேர்க்கின்றனர்.
ஓட்டுப்பதிவு நாளான, நாளை காலை, 6:00 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 13 வகையான ஆவணங்களை கொண்டுசென்று, ஓட்டுப்பதிவு செய்யலாம்.
மாடல் ஓட்டுச்சாவடி:
சட்டசபை தொகுதிக்கு தலா ஒன்று வீதம், 6 மாடல் ஓட்டுச்சாவடி; 6 அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேஜை விரிப்பு, மலர் அலங்காரம், பலுான், வாக்காளர்களுக்கு இருக்கை உள்பட கூடுதல் வசதிகளுடன் மாடல் ஓட்டுச்சாவடிகள் பளபளக்கின்றன. மகளிர் ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பணியாளர், பாதுகாப்புக்கு பெண் போலீசார் உள்பட அனைத்து பணிகளிலும் மகளிர் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுகிறார். சட்டசபைக்கு ஒருவர் வீதம் ஆறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; ஆறு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் - 1, நிலை அலுவலர் - 2, நிலை அலுவலர் - 3 என ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா நான்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள்; தயார் நிலையில் கூடுதல் அலுவலர்கள் என, 8,7000 பேர்; மைக் ரோ அப்சர்வர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட ஒட்டுமொத்த தேர்தல் பணிகளில், 10 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு பணி:
ஓட்டுச்சாவடி மையங்களிலிருந்து 100 மீ., சுற்றளவுக்குள் ரோட்டில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகள், ஓட்டுச்சாவடி மையங்கள், 100 மீட்டர் எல்லைக்கோடு பகுதியில் தேர்தல் விதிமுறைகள், போக்குவரத்து சீரமைப்பு பணிகளில், போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுகின்றனர்.
---
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து, ஓட்டுப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டேஷனரி பொருட்கள் மூட்டையில் கட்டி அனுப்பி வைக்கப்பட்டது.

