/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரங்கள் எதற்கு... நெஞ்சுரம் இருக்கு!
/
கரங்கள் எதற்கு... நெஞ்சுரம் இருக்கு!
ADDED : ஆக 24, 2024 01:14 AM

திருப்பூர்:பிறக்கும்போதே தோள்பட்டை எலும்பு பிரச்னையால், வலது கையைத் துாக்க முடியவில்லை. விரல்களில் அசைவு இருந்தாலும், கையால் எந்தப் பணியையும் செய்ய முடியாது. ஆனாலும், அருண்குமார், 17, தனக்கு இடதுகையும், கால்களும் வலிமையுடன் தானே இருக்கிறது என்ற தன்னம்பிக்கையில், கால்பந்தாட்டக் களத்தில் தற்போது குதித்துள்ளார்.
அருண்குமார், திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். வாலிபால், கபடி, கோ கோ, தடகளம், கிரிக்கெட் என விளையாட்டு எதுவென்றாலும் சளைக்காமல் களமிறங்கும் இவர், தெற்கு குறுமையம் சார்பில் பிரன்ட்லைன் பள்ளியில் நடந்த கால்பந்துப் போட்டியில், தனது திறமையைக் காட்டி அசத்தினார்.
இது, விளையாட்டு ஆர்வலர்களை வியக்கவைத்துள்ளது.
''அப்பா முத்தையா; அம்மா சத்யா; சொந்த ஊர் திண்டுக்கல். பெற்றோர், பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிகின்றனர். தடகளப்போட்டி மற்றும் முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு பதிவு செய்துள்ளேன்.
உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற தொடர்ந்து பயிற்சியும், ஊக்கமும் அளித்து வருகிறார். மண்டலம் மற்றும் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன். கால்பந்தைத் தொடர்ந்து விளையாடுவேன்'' என்கிறார், அருண்குமார், ஆர்வம்பொங்க.
''மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் திறன் அருண்குமாருக்கு உண்டு. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டியில் பரிசுகள் வென்றுள்ளார். கல்லுாரியில் சேர்ந்த பின், போட்டிகளில் முறையாக பயிற்சி பெற்று, சிறப்பான எதிர்காலத்தை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்னால் முடிந்தளவு அவருக்கு உதவுவேன்'' என்று கூறுகிறார், உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன்.

