ADDED : நவ 19, 2024 06:21 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக். 29ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள், நேரடியாகவும், ஆன்லைனிலும், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்காக விண்ணப்பித்துவருகின்றனர்.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மாவட்டத்திலுள்ள 2,536 ஓட்டுச்சாவடிகளிலும், கடந்த 16, 17 தேதிகளில் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில், வாக்காளர்கள் பங்கேற்று, உரிய ஆவணங்களை இணைத்து, பெயர் சேர்ப்பதற்காக படிவம் - 6; நீக்கத்துக்கு படிவம் - 7; முகவரி உள்பட அனைத்துவகை மாற்றங்களுக்காக படிவம் 6, விண்ணப்பங்கள் அளித்தனர்.
நேரடியாகவும், ஆன்லைனிலும், முதல்நாள் முகாமில், 7,222 பேர்; இரண்டாவது நாள் முகாமில், 14,007 பேர் என, மொத்தம் 21,229 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இரண்டுநாள் சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, 11,173 பேர்; பெயர் நீக்கத்துக்காக 2,719 பேர்; திருத்தங்களுக்காக 7,337 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட முகாம், வரும் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில், அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில், 1,984 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர் வடக்கில், 1810 பேர்; அவிநாசியில், 1651 பேர்; உடுமலையில், 1413 பேர்; திருப்பூர் தெற்கில், 1152; தாராபுரத்தில், 1109; காங்கயத்தில், 1082; மடத்துக்குளத்தில் 972 பேர் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.