/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றின் உபரி நீரை சேகரிக்க தடுப்பணை தேவை! தொழில்நுட்ப குழு அமைக்க கோரிக்கை
/
அமராவதி ஆற்றின் உபரி நீரை சேகரிக்க தடுப்பணை தேவை! தொழில்நுட்ப குழு அமைக்க கோரிக்கை
அமராவதி ஆற்றின் உபரி நீரை சேகரிக்க தடுப்பணை தேவை! தொழில்நுட்ப குழு அமைக்க கோரிக்கை
அமராவதி ஆற்றின் உபரி நீரை சேகரிக்க தடுப்பணை தேவை! தொழில்நுட்ப குழு அமைக்க கோரிக்கை
ADDED : மே 19, 2025 02:03 AM

உடுமலை:
'பொதுப்பணித்துறை தொழில்நுட்ப குழு அமைத்து, அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்,' என்ற கோரிக்கை அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது; இதனால், கோடை காலத்தில் பழைய ஆயக்கட்டு பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை அருகே அமராவதி அணையிலிருந்து துவங்கி, 148 கி.மீ., பயணித்து, கரூர் அருகே காவிரி ஆற்றில் அமராவதி ஆறு கலக்கிறது.
அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அமராவதி அணை 4 டி.எம்.சி., கொள்ளளவு உடையதாகும். பயன்பாட்டுக்கு வந்தது முதல் துார்வாரப்படாதது உள்ளிட்ட காரணங்களால், முழு கொள்ளளவில் அணையில் தண்ணீர் தேக்க முடிவதில்லை.
குறிப்பாக, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், சராசரியாக, 2 டி.எம்.சி., க்கும் அதிகமான தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. பருவமழை சீசன் நிறைவு பெற்றதும், சில மாதங்களில், அணையில் நீர்மட்டம் சரிந்து விடுகிறது.
அப்போது, ஆற்றில் நீரோட்டம் இல்லாமல், ஆயக்கட்டு பகுதியில், சாகுபடிகளை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து, கிணறு மற்றும் போர்வெல்களிலும் நீர் கிடைப்பதில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வாக, அமராவதி ஆற்றின் குறுக்கே உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதியில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என, ஆயக்கட்டு விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
நெல் சாகுபடி பாதிப்பு
விவசாயிகள் கூறியதாவது: பருவம் தவறிய மழை உள்ளிட்ட காரணங்களால், அணையிலிருந்து தண்ணீர் திறப்பும் தாமதமாகிறது. இதனால், நெல் சாகுபடி பாதிக்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால், மழைக்காலங்களில் உபரியாக செல்லும் தண்ணீரை சேகரிக்க முடியும். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தாமதம் ஆனாலும், தடுப்பணை தண்ணீரை பயன்படுத்த முடியும்.
அதே போல், கோடை காலத்திலும், நீர் நிர்வாகத்துக்கு தடுப்பணைகள் கைகொடுக்கும். தற்போது அமராவதி ஆற்றுப்படுகையிலுள்ள கிராமங்களுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாகவே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதற்கு, அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் இயல்பான நீரோட்டம் இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது. தடுப்பணைகள் இருந்தால், உள்ளூர் கூட்டுக்குடிநீர் திட்ட ஆதாரங்களை செயல்படுத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும்.
எனவே, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி ஆற்றின் குறுக்கே, தடுப்பணைகள் கட்ட சாத்தியமுள்ள இடங்களை தேர்வு செய்ய, பொதுப்பணித்துறை வாயிலாக சிறப்பு குழு ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்க, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும். இதனால், அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நிலவி வரும், நீர்நிர்வாக பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.