ADDED : செப் 17, 2025 08:50 PM
உடுமலை; கல்லாபுரத்தில், உலர்களம் இல்லாததால், அறுவடை சீசனில் நெல் காய வைக்க, அப்பகுதி விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில், அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக, நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. இரு போகங்களில் நெல் சாகுபடியாகிறது.
அறுவடை சீசனில்,நெல்லை உலர வைத்து, வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அப்பகுதியில், போதிய உலர்கள வசதியில்லை.
விளைநிலங்களிலுள்ள சிறு பாறைகள் மற்றும் இணைப்பு ரோடு, பாலங்களில், நெல்லை காய வைக்க வேண்டிய நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர். கல்லாபுரத்தில், நெல்லை காய வைக்க உலர்களம் அமைத்துதர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை அப்பகுதி விவசாயிகள் விடுத்து வருகின்றனர். வேளாண்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.