/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண்மையில் காத்திருக்கும் பெரும் சவால்! ஒருங்கிணைந்து செயல்படுத்த யோசனை
/
திடக்கழிவு மேலாண்மையில் காத்திருக்கும் பெரும் சவால்! ஒருங்கிணைந்து செயல்படுத்த யோசனை
திடக்கழிவு மேலாண்மையில் காத்திருக்கும் பெரும் சவால்! ஒருங்கிணைந்து செயல்படுத்த யோசனை
திடக்கழிவு மேலாண்மையில் காத்திருக்கும் பெரும் சவால்! ஒருங்கிணைந்து செயல்படுத்த யோசனை
ADDED : நவ 14, 2024 11:32 PM
திருப்பூர் ; திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் தொய்வு தென்படுவதால், 'முன்மாதிரி ஊராட்சி' என்ற இலக்கை எட்டுவதில் ஊராட்சி நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை, 'முன்மாதிரி ஊராட்சி' என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கிராம ஊராட்சிகளில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது :
மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின் விளைவாக, கிராம ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டம் முழுமை பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் உள்ளிட்ட திரவக்கழிவுகளை வெளியற்ற, வீடுகளின் முன் உறிஞ்சுக்குழி அமைக்கும் திட்டமும் வெற்றிகரமான திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், வீடு, கடை, ஓட்டல்களில் இருந்த வெளியேற்றப்படும் குப்பைக் கழிவு உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம் தான் பெரும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. பெரும்பாலான கிராம ஊராட்சிகளில், குப்பைக் கொட்டுவதற்கு இடமே இல்லை. தினமும் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிப்பது, அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது; மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளுக்கு போதியளவு பணியாளர்களோ, கட்டமைப்போ இல்லை. இதனால், குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன; சாலையோரம் மற்றும் வாய்க்காலில், குடியிருப்புவாசிகள் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு தீர்வு காணாத வரை, 'முன்மாதிரி ஊராட்சி' என்ற இலக்கை எட்டுவது சிரமம்.
அருகருகே உள்ள, 3,4, ஊராட்சிகளுக்கு பொதுவான ஓரிடத்தை தேர்வு செய்து, அங்கு குப்பைகளை கொட்டி தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும் என, தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம்; அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.