/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் உருவான பசுஞ்சோலை
/
அரசு பள்ளியில் உருவான பசுஞ்சோலை
ADDED : செப் 14, 2025 11:49 PM

பல்லடம்; பல்லடம்-, மங்கலம் ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஐநுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பல்லடம் நகரப் பகுதியில் வசிக்கும், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு, இப்பள்ளி மைதானம்தான் பயிற்சி மேற்கொள்வதற்கு பிரதான இடமாக உள்ளது.
கடந்த காலத்தில், சமூக விரோதிகளின் நடமாட்டம், அத்துமீறல் காரணமாக, பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகம் மோசமாக காணப்பட்டது.
எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், கண்ணாடித் துண்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் என, சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்டது. இதை ஒழுங்கு படுத்தும் பணியை பல்லடம் அறம் அறக்கட்டளை, பல்லடம் கால்பந்து குழு ஆகியவை மேற்கொண்டன. மைதானத்தை, கால்பந்து குழுவினர் சீரமைக்க, மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தை, பசுமையாக்கும் முயற்சியில் அறம் அறக்கட்டளை ஈடுபட்டது.
மைதானத்தை சுற்றிலும், பசுமையான மரக்கன்றுகள் நடப்பட்டன. நுழைவு வாயில் மற்றும் காலி இடத்தில், மருத்துவ குணம் மிக்க மரங்கள், செடி, கொடிகள் நடப்பட்டன. சில இடங்களில் வெட்டி அகற்றப்பட்ட மரங்களும், வேருடன் பெயர்த்து எடுத்து பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.
அறக்கட்டளையினரின் தொடர் முயற்சியால், மூன்று ஆண்டுக்கு முன் நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் நிழல் தரும் மரங்களாக வளர்ந்து, இன்று பசுஞ்சோலையாக காட்சியளிக்கின்றன. பள்ளி வளாகத்துக்குள் நுழையும் ஒவ்வொரு வரும், பூங்காவுக்குள் நுழைவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இது உள்ளது. இத்தகைய முயற்சியை, தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும் மேற்கொண்டால், ஒவ்வொரு அரசு பள்ளிகளும் பசுஞ்சோலையாக மாறும்.