ADDED : ஜன 16, 2025 04:17 AM
குடும்பம் முழுதும் கூடி இருக்கும், கும்மாளமாய் நல்ல சந்தோஷமாய்... உரிமையோடு முறை சொல்லி, உறவுகள் பகிர்ந்து கொள்ளும்...
இது, தமிழர்களின் பாரம்பரியம் போற்றும் பொங்கல் விழாவின், நான்காவது நாளில் கொண்டாடப்படும் காணும் பொங்கலை குறிக்கும் பாடல் வரிகள். காணும் பொங்கலை 'கன்னிப்பொங்கல்' 'கணுப்பண்டிகை' எனவும் அழைப்பர். இப்பண்டிகையின் போது உற்றார், உறவினர், நண்பர்களை காண்பது, பெரியோரின் ஆசி பெறுவது, குடும்பமாய் ஒன்று கூடி, நீர் ததும்பும் ஆற்றங்கரையோரம் பொழுது போக்குவது, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்வது, வழக்கம்.
அதோடு, விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம் உள் ளிட்ட நிகழ்ச்சிகளுடன், உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகச விளையாட்டும் இடம் பெறும். உடன்பிறந்த சகோதரர்கள் நலம், வளமுடன் வாழ, இந்நாளில் சகோதரிகள் பிரார்த்தனை செய்யும் வழக்கமும் உண்டு.
இது குறித்து, திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
பொங்கல் பண்டிகை என்பது சூரியனை வழிபடுவது, என்ற நிலையில் தான், நம் நாட்டில் இருந்தது. ஆனால், நம் மாநிலத்தில், பொங்கல் விழா என்பது, உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரியனை வழிபடு வதுடன், உழவர்களை கவுரவிக்கும், பெருமைப்படுத்தும் ஒரு விழாவாக மாறியிருக்கிறது. 'தெய்வத்துக்கு நிகரானவர்கள் உழவர்கள்' என்கிறார் கம்பர். உழவர் குலம், தலைசிறந்த பெருமைக்குரியவர்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
வீடுகளில் பொங்கல் வைப்பது, எதிர்வினைகள் நீங்கி, மங்கலம் பிறக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி பொங்கலிடுவது, குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எந்த ஊரில் இருந்தாலும், பொங்கல் பண்டிகையின் போது உறவுகள் சங்கமிக்கும்.
குழந்தைகள் துவங்கி, பெரியவர்கள் வரை உறவுகளை சொல்லி, அன்பு பரிமாற்றத்துடன், பொங்கல் கொண்டாடுவது என்பது, தன்னம்பிக்கை, பாரம்பரியம், கலாசாரம் நிறைந்தது, நம் தமிழர்களின் வாழ்வு என்பதை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

