/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொஞ்சம் கசப்பு... நிறைய சிறப்பு
/
கொஞ்சம் கசப்பு... நிறைய சிறப்பு
ADDED : டிச 14, 2025 07:38 AM

சாக்லெட்டின் மூலப்பொருளான 'கோகோ' (COCOA) நம் உடலுக்கு நன்மையளிக்கக் கூடியது என்று கூறுகிறார், ஊட்டச்சத்து நிபுணர் சந்தியா .
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
நாம் உண்ணும் 'சாக்லெட்' இந்த கோகோவின் மதிப்புகூட்டிய இறுதிப்பொருள். கோகோ, வெண்ணெய், சர்க்கரை, சில கெமிக்கல் என பல சேர்க்கப்படுவதால் கோகோவின் நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை. சுத்தமான கோகோ பல நன்மைகளை கொடுக்கும். சற்று கசப்பாக இருப்பதால் சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் நறுமண பொருட்கள், அதன் சத்துகளை குறைத்து தீங்காக மாற்றுகின்றன.
நன்மைகள் கோகோவில் உள்ள பொட்டாசியம், நம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதிகளவு பாலிபீனால் இருப்பதால் மாரடைப்பு வரும் சதவீதத்தை குறைத்து, இருதய நலனை மேம்படுத்துகிறது என்று சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், நம் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், நரம்பு பிரச்னை குறையும், அறிவாற்றல் மேம்படும். அதிக ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோயை தடுக்கிறது; வயதான தோற்றத்தை குறைக்கிறது; குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவரும் எடுத்துக்கொள்ளலாம். மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர் , இரும்பு சத்துகள் இருப்பதால் துாக்கம், எலும்பு வலிமை மேம்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும். நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கும்.
எப்படி சாப்பிடுவது? அப்படியே சாப்பிடுவது கசப்பாக இருக்கும். நல்லது எல்லாமே கசப்புதான் போல. பழங்கள் மீது துாவி, ஸ்மூத்திகள், பழச்சாறு போன்றவற்றில் சேர்த்தல், பாலில் கலந்து, வீட்டில் செய்யக்கூடிய கேக்குகள் போன்றவற்றில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு பேன் கேக், சத்துமாவு லட்டு, ஜூஸ், பால் போன்றவற்றில் கலந்து கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

