/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆகாய தாமரையில் மூழ்கும் மூளிக்குளம்
/
ஆகாய தாமரையில் மூழ்கும் மூளிக்குளம்
ADDED : ஜன 30, 2025 11:53 PM

திருப்பூர்: திருப்பூரில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் கட்டுக்கடங்காமல் கழிவுநீர் சங்கமிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் 'உறக்கம்' தெளிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மழை மறைவு பகுதியாக உள்ள திருப்பூரில், சில ஆண்டுகளாக மழைப் பொழிவு இருந்து வருகிறது; இதனால், நீர்நிலைகள் நிரம்புகின்றன.
திருப்பூரில் நஞ்சராயன் குளம், ஆண்டிப்பாளையம், மூளிகுளம் என, பல்வேறு நீர்நிலைகள் உள்ள நிலையில், அவற்றின் நீர் மாசுபட்டு கிடக்கிறது.
நல்லாறு, நொய்யல் ஆறுகளும் திருப்பூரை மையப்படுத்தியே ஓடுகின்றன.
குளம் மற்றும் அதன் நீர் வழித்தடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன நீர் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளம் மற்றும் நீர்நிலைகளில் கலக்கவிடப்படுகின்றன; இதனால், அங்கு தேங்கியுள்ள நீர் மாசுபட்டிருக்கிறது.
மண்ணரை பகுதியில் உள்ள மூளிக்குளத்துக்கு, நொய்யல் அணைக்காடு பகுதியில் இருந்து ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது.
ஊத்துக்குளி ரோட்டின் தென்புறம் உள்ள மூளிக்குளம், குப்பைக் கொட்டும் இடமாகவும், கழிவுநீர் தேங்கும் இடமாகவும் மாறியுள்ளது; தற்போது, அக்குளத்தை ஆகாயத்தாமரை மூழ்கடித்திருக்கிறது.
'பொதுவாக குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் அதிகளவிலான பறவைகள் வந்து செல்வதை பார்க்க முடியும்.
சமீபத்திய நாட்களில் பறவைகள் வந்து செல்வது கூட குறைந்திருக்கிறது; நீர்நிலைகள் மாசுபட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம்' என்கின்றனர், பறவை ஆர்வலர்கள்.
எனவே, நீர்வளத்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறையினர், 'உறக்கம்' தெளிந்து, நீர்நிலைகள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது.

