/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாற்றப்படும் பி.ஏ.பி., கால்வாய் பாசன நீர் மாசு தடுக்க தேவை நிரந்தர தீர்வு
/
குப்பை கிடங்காக மாற்றப்படும் பி.ஏ.பி., கால்வாய் பாசன நீர் மாசு தடுக்க தேவை நிரந்தர தீர்வு
குப்பை கிடங்காக மாற்றப்படும் பி.ஏ.பி., கால்வாய் பாசன நீர் மாசு தடுக்க தேவை நிரந்தர தீர்வு
குப்பை கிடங்காக மாற்றப்படும் பி.ஏ.பி., கால்வாய் பாசன நீர் மாசு தடுக்க தேவை நிரந்தர தீர்வு
ADDED : அக் 21, 2024 06:10 AM

உடுமலை : பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரை பகுதிகள் குப்பைக்கிடங்காக மாற்றப்படுவதால், பாசன நீர் மாசடைந்து வருகிறது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், உடுமலை கால்வாய் வாயிலாக, 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
வழியோரத்திலுள்ள, நுாற்றுக்கணக்கான குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டு ஆதாரமாகவும், பி.ஏ.பி., கால்வாய் உள்ளது.
இதில், கால்வாய் கரை ஒரத்தில், ஜல்லிபட்டி, போடிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளின் குப்பை கிடங்குகள் அமைந்துள்ளன.
சுற்றிலும் காம்பவுண்ட் வசதி, திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தாததால், மலைபோல் குவிந்துள்ள குப்பை, கால்வாயில் நேரடியாக சரிந்து வருகிறது. காற்றுக்கு, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் பறந்து வந்து, நீரில் விழுகிறது.
அதே போல், கால்வாய் கரையில், ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், பெரிய கோட்டை ஊராட்சிகளிலுள்ள நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப்படும் குப்பையும் கரை ஓரத்திலும், நேரடியாக பி.ஏ.பி., கால்வாயில் கொட்டப்படுகிறது.
பாசனத்திற்கு நீர் வழங்கப்படும் போது, அதிகளவு குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் பாசன நீரில் கலந்து வருகிறது. மடைகளில் கழிவுகள் தேங்கி, பாசனத்திற்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், நீர் திறக்கப்படும் போது, விவசாயிகள் தொடர்ந்து கண்காணித்து, கழிவுகளை அகற்ற வேண்டிய அவல நிலை உள்ளது.
விவசாய நிலங்களுக்கு வரும் நீரிலும், பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள் வருவதால், பயிர் செய்துள்ள நிலங்களுக்கும் பாழாகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., கால்வாயின் இரு புறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், கழிவுகள் கொட்டும் இடமாக கால்வாய் மாறியுள்ளது.
அதிலும், போடிபட்டி, ஜல்லிபட்டி ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை அனைத்தும், வாய்க்கால் கரையில் கொண்டு வந்து கொட்டி, குப்பைக்கிடங்காக மாற்றப்படுகிறது.
குப்பைக்கிடங்கு அமைத்துள்ள ஊராட்சிகள், கால்வாயில் குப்பை கலக்காதவாறு, சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும். நகர பகுதியில் வரும் வாய்க்கால் கரையில், குப்பைகள் கொட்டாதவாறு கண்காணிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், குப்பையை கொட்டும் ஊராட்சிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், 'ஜீப் டிராக்' வழித்தட ஆக்கிரமிப்புகளை மீட்டு, குடியிருப்புகள் உள்ள பகுதிகளில், கழிவுகள் கொட்ட முடியாதபடி கம்பி வேலி அமைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.