UPDATED : அக் 24, 2026 04:38 AM
ADDED : அக் 23, 2026 07:59 PM

பல்லடம்: பல்லடம் அருகே குப்பைக்கிடங்கில் நுாற்றுக்கணக்கில் ஆதார் அட்டைகள் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில் குப்பைக்கிடங்கு உள்ளது. நேற்று அவ்வழியே சென்ற பொதுமக்கள் குப்பையில் ஆதார் அட்டைகள் நுாற்றுக்கணக்கில் கிடப்பதை கண்டனர். அனைத்திலும் அவிநாசி சுற்றுவட்டார முகவரிகள், தபால் துறை முத்திரை இருந்தது. தபால் துறை மூலம் பொதுமக்களுக்கு அனுப்ப வேண்டிய அட்டைகள் இவை. தகவல் அறிந்து வி.ஏ.ஓ. மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஆதார் அட்டைகளை சேகரித்து எடுத்து சென்றனர்.
திருப்பூர் தபால் துறை மக்கள் தொடர்பு அலுவலர் பிரதீஷிடம் கேட்டபோது, 'அவிநாசி துணை தபால் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, விசாரித்து வருகிறோம்' என்றார்.
