/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.ஆர்.ஓ., மீது நடவடிக்கை; அரசு செயலருக்கு கடிதம்
/
டி.ஆர்.ஓ., மீது நடவடிக்கை; அரசு செயலருக்கு கடிதம்
ADDED : செப் 16, 2025 11:21 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு வாங்க மறுத்த டி.ஆர்.ஓ., மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கக்கோரி, வருவாய்த்துறை கூடுதல் செயலருக்கு, சமூக ஆர்வலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் குறைகேட்பு கூட்டத்தை நடத்தினார். பல்லடம் அருகே சாமளாபுரத்தில் பேரூராட்சி தலைவரால் கார் ஏற்றி, சமூக ஆர்வலர் பழனிசாமி கொலை செய்யப்பட்டதால், சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, மனு அளிக்க சரவணன், கிருஷ்ணசாமி, சண்முக சுந்தரம், சுப்பிரமணியன் உள்பட சமூக ஆர்வலர்கள், குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தனர்.
தாங்கள் அளித்த மனுவை டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும், தவறான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறிய சமூக ஆர்வலர்கள், குறைகேட்பு கூட்ட அரங்கில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பின், சில அதிகாரிகள் சமாதானம் செய்ததால், போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
குறைகேட்பு கூட்டத்தில் மனு வாங்க மறுத்த டி.ஆர்.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், வருவாய்த்துறை கூடுதல் செயலர் அமுதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறுகையில், 'சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாங்கள் அளித்த மனுவை, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், வாங்க மறுத்துவிட்டார். 'நீங்களெல்லாம் நேரடியாக கலெக்டரிடம்தான் மனு அளிக்கவேண்டும்' என கூறி, நுகர்வோர் சங்க பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் பேசினார்.
திருப்பூர் மாவட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்கும், அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று தீர்வு காணும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகளை அவமதித்ததோடு, குறைகேட்பு கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த டி.ஆர்.ஓ., மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்,' என்றார்.