ADDED : பிப் 09, 2025 12:32 AM
திருப்பூர் : குளிர்காலத்தில் ஆர்.எஸ்.வி., எனப்படும் சுவாசப்பாதை தொற்று மற்றும் இன்புளூயன்ஸா தொற்று சில இடங்களில் பரவி வருகிறது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை; வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.
அதேநேரம், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், உடல் நிலையில் தொடர் சிரமங்கள் இருந்தால், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. சிலருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சளியில் ரத்தம் கலந்து வருதல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தீவிர பாதிப்புகள் உள்ளவர், உணர்பவர்கள் உடனே பரிசோதனை செய்து, நிமோனியா அல்லது தக்க தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

