/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல்: மாநில எல்லையில் சோதனை
/
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல்: மாநில எல்லையில் சோதனை
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல்: மாநில எல்லையில் சோதனை
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல்: மாநில எல்லையில் சோதனை
ADDED : அக் 19, 2025 10:20 PM

உடுமலை: உடுமலை அருகே, தமிழக - கேரளா எல்லையில் கால்நடைத்துறையினர், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சோதனை மேற்கொண்டு வருவதோடு, வனப்பகுதியிலுள்ள காட்டுப்பன்றிகள் திடீரென இறந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட வனப்பகுதியில், செப்.,-அக்., மாதங்களில், திடீரென பலியான காட்டுப்பன்றிகளில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய், வைரஸ் கிருமியால் பரவும் மிகவும் ஆபத்தானதும், நோய் தாக்கினால், 90 முதல், நுாறு சதவீதம் இறப்பை ஏற்படுத்தும் நோயாகும்.
இருமல், தும்மலால் பாதிக்கப்பட்ட விலங்கின் பண்ணை உபகரணங்கள், வெளிப்புற ஒட்டுண்ணிகள், தீவனங்கள் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் மற்ற பன்றிகளுக்கும், பன்றி பண்ணைகளுக்கும் பரவும் தன்மை உடையதாகும்.
பன்றிக் காய்ச்சல் நோயினை கண்டறியவும், பரவாமல் தடுக்கவும், சென்னை கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கேரளா - தமிழக எல்லையில், உடுமலை - மூணாறு ரோட்டில், ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் கால்நடைத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதோடு, அங்கிருந்து உயிருள்ள பன்றிகள், பன்றி இறைச்சிகள், தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்கள், தமிழக எல்லைப் பகுதியில் நுழைவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், திருப்பூர் மாவட்ட வனத்துறையினருக்கு, காட்டுப்பன்றிகளில் ஏதாவது அசாதாரண உயிரிழப்புகள் கண்டறியப்பட்டால், உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தடுப்பு பணியை, சென்னை கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு உதவி இயக்குனர் அகிலன் ஆய்வு மேற்கொண்டார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.