/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீப ஒளி எங்கும் பரவட்டும்:ஆன்மிகப் பெரியோர் கருத்து
/
தீப ஒளி எங்கும் பரவட்டும்:ஆன்மிகப் பெரியோர் கருத்து
தீப ஒளி எங்கும் பரவட்டும்:ஆன்மிகப் பெரியோர் கருத்து
தீப ஒளி எங்கும் பரவட்டும்:ஆன்மிகப் பெரியோர் கருத்து
UPDATED : அக் 19, 2025 11:22 PM
ADDED : அக் 19, 2025 10:45 PM

திருப்பூர்: இன்று தீபாவளி; தீப ஒளியால், இருள்போன்ற கவலைகள் மறைந்து, அனைவரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டு மென ஆன்மிகப் பெரியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தீமைகள் அகலும் நல்லன மிகும் காமாட்சிதாச சுவாமிகள், வாகீசர் மடாலயம், அவிநாசி:
தீபாவளி பண்டிகையில் ஒளிரும் தீபத்தைப் போல், பிரகாசமான ஒளி பரவி, பாரத தேசம் மிகுந்த செழிப்புடனும், ஒற்றுமையுடனும், சகோதரத்துவமாகவும் விளங்க இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
நல்லாட்சி மலர, மக்கள் ஆனந்தத்தை அனுபவிக்க, எல்லாவிதமான தீமைகளும் அகன்று, நன்மைகள் பெருக வாழ்த்துகள். நம்மிடம், அசுர தன்மை எனப்படும் தீய எண்ணம் மறைந்து, இறைவன் கருணையால் நல்லெண்ணம் மிகுந்து, எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்.
உலகில், மழை சீராக பெய்து, சிறப்பான அரசு நடந்து, மக்கள் குறைவில்லாமல் வாழ, இறைவனை வேண்டி, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒளி தான் நம் நம்பிக்கை ராஜ சரவணமாணிக்கவாசக சுவாமிகள், கூனம்பட்டிகல்யாணபுரி ஆதீனம்:
மனித வாழ்க்கைக்கு ஒளி மிகவும் முக்கியமானது. ஒருவரது வாழ்க்கையில் அத்தகைய பிரகாசமான நிலைக்கு வர, பல்வேறு சிரமங்களும், தடைகளும் இருக்கலாம். அசுர வேகத்தில் இருள் போன்ற துன்பங்களும், சோதனைகளும் வரும். மற்றவர்களால் வருவது பாதி என்றால், நாமே தேடிக்கொள்வது மீதி. இருப்பினும், இருள்சூழ்ந்த நேரத்திலும், ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவசியம். இறை நம்பிக்கையால் மட்டுமே இருள்நீக்கும் ஒளி நம்மை வந்தடையும். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதற்காகத்தான், தீபம் ஏற்றி வைத்து தீபாவளி கொண்டாடுகிறோம். தீபாவளி பண்டிகை, அனைத்து மக்களுக்கும் ஆற்றலையும், ஏற்றத்தையும் அளிப்பதாக அமையும்.
மன நிறைவுடன் வாழ்வோம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர், காமாட்சிபுரி ஆதீனம்:
தீமையை கடுமையாகச் செய்து மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்பம் கொடுத்த நரகாசுரனை தேவர்கள் அழித்து மக்களும், தேவர்களும் மகிழ்ந்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்னும் பல நம்பிக்கை கதைகள் உண்டு. இருப்பினும், இதை கதையாகச் சொல்லி கொண்டிருக்காமல் நமக்குள் இருக்கும் நரகாசுரனாகிய கொலை, களவு.
பஞ்சபாதகம், பொய், தீண் டாமை, புலால் உண்ணாமை, மது பழக்கம் தவிர்த்தல், உழைக்காமல் உண்பது, கணவனை அவமதிப்பது, மனைவியை கொடுமை செய்வது, பெற்றோர் சொல் மீறுதல், அதிக உறக்கம் இதுபோன்ற இன்னும் மனித வளர்ச்சிக்கு தீங்கு செய்யும் அரக்கர்களை அழித்து, தீபாவளி நாளன்று அதிகாலை எழுந்து, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பிறருக்கு மனிதநேயத்தை காட்டி, நம்மிடம் இருக்கும் இருள்களை நீக்கி, ஒளி ஏற்றி மன நிறைவுடன் வாழ இறைவனை வேண்டுவோம்.
பெரியவர்களின் ஆசி தேவை ஸ்ரீநடராஜ சுவாமிகள்,ஸ்ரீகுருகுல வேத பாடசாலை முதல்வர், கூனம்பட்டி:
எவ்வளவு உயிரினங்கள் இருந்தாலும், மகிழ்வது, கொண்டாடுவது, வழிபடுவது, ஆனந்தமடைவது என்ற மிகப்பெரிய வரத்தை, இறைவன் மனிதர்களுக்கு மட்டுமே அருளியுள்ளார். ஆண்டுதோறும் தைப்பொங்கல், தீபாவளி, சித்திரைக்கனி போன்ற பண்டிகையை, குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கிறோம்.
தீபாவளியை, பெரியவர்கள் ஆசியுடன் கொண்டாட வேண்டும். கவலைகளை மறந்து, மகிழ்ச்சி பொங்கும் அதிகாலையில், எண்ணெய் தேய்த்து குளித்து கொண்டாட வேண்டும்.
கங்கா ஸ்நானம் செய்து, பிரகாசம் பரப்புவது போல் மத்தாப்பு கொளுத்தி மகிழ வேண்டும். இனிப்பு போல், அனைவருடனும் இன்புற பழகி, ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற தானம் செய்து இறையருள் பெறலாம்.
பிரார்த்தனையே சிறப்பு சுந்தரமூர்த்தி சிவம், முதல்வர், ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாடசாலை:
அனைத்து மக்களும் கொண்டாட கூடிய ஒரு விழாவாக தீபாவளி விளங்குகிறது. இதற்கு பல புராணங்களிலும், சாஸ்திரங்களில் விளக்கமாக சொல்லியுள்ளனர். தீபாவளி திருநாளில் நரக சதுர்த்தி என்று சொல்லக்கூடிய இந்த நாளில், அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
புத்தாடை உடுத்தி, இனிப்பு எல்லோருக்கும் பரிமாறி, நாம் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். ராமபிரான் அயோத்திக்கு திரும்பிய நாளையே தீபாவளி திருநாளாக வட மாநிலங்களில் கொண்டாடுகின்றனர் இந்நாள். மகாலட்சுமிக்கு உகந்த நாளாகவும் அமைந்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தில், அன்பையும், ஞானத்தையும் எல்லோருக்கும் வழங்கி, எல்லா மக்களும் இன்புற்று இருக்க இறைவனை பிரார்த்தனை செய்வதுதான் சிறப்பு.