/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளில் வெள்ளம்; சாலைகள் துண்டிப்பு
/
வீடுகளில் வெள்ளம்; சாலைகள் துண்டிப்பு
ADDED : அக் 19, 2025 10:46 PM

அவிநாசி: அவிநாசி பகுதியில் இரவு முழுக்க கொட்டிய கனமழை காரணமாக, வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குட்டைகள் நிரம்பின.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் சேவூர், அ.குரும்பபாளையம், வேட்டுவபாளையம், நடுவச்சேரி, துலுக்க முத்துார், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது.
நடுவச்சேரி அங்காளம்மன் கோவில் அருகே விளை நிலத்தில் புகுந்த மழை நீர் வெள்ளம் தரைப்பாலத்தில் ஆர்ப்பரித்து மூன்றடி உயரத்திற்கு ஓடியது.
அவிநாசியிலிருந்து நடுவச்சேரி வழியாகதுலுக்கமுத்துார், வடுகபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 5:00 மணி முதல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மழை நீர் வெள்ள பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கயிறுகள் கட்டி எச்சரிக்கை செய்தனர்.
நடுவச்சேரி ஈஸ்வரன் கோவில் எதிரில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் வெள் ளம் சூழ்ந்தது. மக்கள் வெளியேறினர். ஒரே இரவில் ஈஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள குளம் முழுமையாக நிரம்பியது.
சிலுவைபுரம் கிராம பகுதிக்கு செல்லும் ரோடு முழுமையாக வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. சிலுவைபுரம் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
செம்மாண்டம்பாளையம் குளம் நிரம்பி தடுப்பணை வழியாக வெளியேறிய மழை நீர் நீர்வழிப் பாதையில் கரைபுரண்டு ஓடியது. மாரப்பம்பாளையம் குட்டை நிறைந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறி கருமா பாளையம் மற்றும் செம்மாண்டம்பாளையம்குட்டைகள் நிரம்பி மடத்துப்பாளையம் ரோட்டில் நீர்வழிப்பாதை வழியாக அவிநாசியில் உள்ள சங்கமாங்குளம் சென்றடைகிறது.
அவிநாசி மடத்துப்பாளையம் ரோட்டில் செம்மாண்டம்பாளையம் மற்றும் கருமாபாளையம் ஆகிய கிராம பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில் 5 அடிக்கும் மேல் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.