/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் வளர்ச்சி; களமிறங்கும் விஞ்ஞானிகள் குழு
/
வேளாண் வளர்ச்சி; களமிறங்கும் விஞ்ஞானிகள் குழு
ADDED : மே 29, 2025 12:48 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது வட்டாரங்களிலும் இன்று முதல் ஜூன் 12ம் தேதி வரை, வேளாண் வளர்ச்சி பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, விஞ்ஞானிகள் அடங்கிய 30 குழுவினர் களமிறங்குகின்றனர்.
மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில், 'விக் ஷித் க்ரிஷி சங்கல்ப் அபியான்' என்ற பெயரில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒடிசாவில் இன்று நடைபெற உள்ள விழாவில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைக்கிறார். 2,170 குழுக்கள் மூலம், நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 65 ஆயிரம் கிராமங்களில், 1.5 கோடி விவசாயிகள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் காரீப் பருவத்தில் பயிரிடப்படும் பிரதான பயிர்கள் தொடர்பான நவீன நுட்பங்கள் குறித்தும், பயனுள்ள அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகள், சமச்சீர் உரங்கள் பயன்படுத்துவது, மண் சுகாதார அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு பயிர்களை தேர்ந்தெடுப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பொங்கலுாரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் மூலம், திருப்பூர், பல்லடம், அவிநாசி, பொங்கலுார், காங்கயம், குண்டடம், தாராபுரம், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய பத்து வட்டாரங்களிலும், விவசாயிகள் மத்தியில் இன்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், வேளாண் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:
ஜூன் 12ம் தேதி வரை, வேளாண் வளர்ச்சிப் பிரசாரம் நடைபெறும். இதற்காக, ஒரு வட்டாரத்துக்கு மூன்று வீதம் மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி, மத்திய வேளாண் ஆராய்ச்சி கழக விஞ்ஞானி, அந்தந்த வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் என, 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அந்தந்த வட்டாரங்களிலுள்ள வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்பட பொது இடங்கள், தேவைப்பட்டால் விவசாய தோட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வேளாண், தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகங்கள் மூலம், விவரங்களை பெற்று, தங்கள் கிராமங்களில் நடைபெறும் விழிப்புணர்வு பிரசாரத்தில் விவசாயிகள் தவறாமல் பங்கேற்கவேண்டும்.
காரீப் பருவ பயிர்கள், நவீன நுட்பங்கள், புதிய உரங்கள், இயற்கை வேளாண்மை, மண்வளம் குறித்து விளக்கம் அளிக்கப்படும். உரம், பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு ட்ரோன் பயன்பாடு குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்படும். விவசாயிகள் தங்கள் அனைத்து விதமான சந்தேகங்களையும், விஞ்ஞானிகள் குழுவினரிடம் கேட்டு தெளிவு பெறலாம். தங்கள் பிரச்னைகள், தாங்கள் பயன்படுத்தும் சிறந்த நுட்பங்கள் குறித்தும் தெரிவிக்கலாம்.