ADDED : அக் 14, 2025 12:58 AM

திருப்பூர்;திருப்பூரில், தீபாவளி காற்று மாசு குறித்து அளவீடு செய்யும் பணிகளை மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக விஞ்ஞானிகள் நேற்று முதல் துவக்கியுள்ளனர்.
தொழிற்சாலை பகுதிக்காக, மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர் அலுவலகம் (வடக்கு) அமைந்துள்ள குமரன் வணிக வளாகத்திலும்; குடியிருப்பு பகுதியான ராயபுரத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் மாசுக்கட்டுப்பாடு வாரிய கட்டடத்தின் மேற்பகுதியிலும், காற்று மாசு அளவீடு செய்யும் ஆம்பியன் ஏர் குவாலிட்டி மெஷர்மென்ட் கருவி வைக்கப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆய்வக தலைமை விஞ்ஞானி (கூடுதல் பொறுப்பு) மணிசேகர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை, காற்று மாசு கருவிகளை பொருத்தினர்.
இதன் வாயிலாக, காற்றில் கலந்துள்ள 2.5 மற்றும் 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள்; சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்சைடு அளவுகள் பதிவு செய்யப்பட உள்ளது.
வரும் 19ம் தேதி வரை, பண்டிகைக்கு முந்தைய காற்று மாசு; 20 முதல் 27ம் தேதி வரை, பண்டிகை கால காற்று மாசு அளவிடப்படுகிறது.