/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலகுமலை ஜல்லிக்கட்டு அமர்க்களம்
/
அலகுமலை ஜல்லிக்கட்டு அமர்க்களம்
ADDED : பிப் 16, 2025 11:47 PM

திருப்பூர்; அலகுமலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வாடி வாசல் வழியாக 600 காளைகள் சீறிப்பாய்ந்தன; 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். சிறந்த மாடுபிடி வீரர்கள், காளைக்கு மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், இந் தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கலுார் அருகே, அலகுமலையில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், போட்டியை துவக்கிவைத்தார்.
டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பிரகாசம், ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க கவுரவ தலைவர் பாலுசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை, விழுப்புரம், கரூர், திண்டுக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த காளை வளர்ப்பாளர்கள், 600 காளைகளை கொண்டு வந்திருந்தனர். திருப்பூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், பங்கேற்றனர்.
மருத்துவ பரிசோதனை
உயரம், ரத்த அழுத்தம், மது அருந்தியுள்ளனரா என, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபின், மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டனர். அதேபோல், காளைகளின் உடல் தகுதிகள், பதிவு செய்யப்பட்ட காளைதான் அழைத்துவரப்பட்டுள்ளதா என பரிசோதிக்கப்பட்டபின், போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது.
பதிவெண் அடிப்படையில் வாடிவாசலில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. தங்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள், தீரத்துடன் எதிர்கொண்டு, திமில் பிடித்து அடக்கினர்.
அதேபோல், பல காளைகள், வீரர்களுக்கு பிடி கொடுக்காமலும், கம்பீரமாக நேருக்கு நேர் எதிர்த்து நின்று கொம்பை ஆட்டி எச்சரிக்கை செய்து, உரிமையாளருக்கு பெருமை பெற்றுக்கொடுத்தன.
திரண்ட மக்கள்
ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக, திருப்பூர் மற்றும் அருகாமை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஆர்வமுடன் அலகுமலையில் திரண்டனர். வாடிவாசலின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த கேலரியில், ஐந்தாயிரம் பேர் திரண்டு, ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். விசில் அடித்தும், கரவொலி எழுப்பியும் மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதி முழுவதும் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெற்ற மைதானம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெருந்தொழுவு அரசு பள்ளி முதலே, அலகுமலை செல்லும் ரோட்டில், ஆங்காங்கே மையத்தடுப்பு அமைத்து, போலீசார் போக்குவரத்துக்கு சீரமைப்பில் ஈடுபட்டிருந்தனர்.
களத்தில் காயமடைந்த வீரர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ்; காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களுடன் பிரத்யேக ஆம்புலென்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஆறு படுக்கை வசதியுடன் கூடிய மினி கிளினிக் அமைக்கப்பட்டு, அறுவை சிகிச்சை, பொது, எலும்புமுறிவு, மயக்கவியல் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தனர். காயமடைந்த வீரர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
வி.ஐ.பி.,க்கள் பெயரில்...
ஜல்லிக்கட்டில், மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி, மகன் பெயரிலும், நடிகர் சூரி காளைகள் களமிறக்கப்பட்டன. அதேபோல், உள்ளூர், வெளியூர்எம்.எல்.ஏ.,க்கள், ஜல்லிக்கட்டு சங்கங்கள் சார்பிலும் காளைகள் பங் கேற்றன. அந்த காளைகளை பிடித்த வீரர்களுக்கு, வி.ஐ.பி.,க்கள் சார்பில், பட்டுப்புடவை போன்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகளுக்குள் சண்டை
களத்தில் வீரர்களிடம் பிடிபட்ட, பிடிபடாமல் ஓடிய காளைகளை உரிமையாளர்கள் துரத்திச் சென்றனர். கொம்பு, கழுத்தில் கயிறால் கட்டி, அழைத்துச்சென்றனர். சில காளைகள், நேரம் முடிந்தபின்னரும் களத்திலிருந்து வெளியேறாமல், திரும்பிவந்து வீரர்களை துரத்தின.
இரண்டு காளைகள் சேர்ந்து, கொம்புகளால் தாக்கியும், தலையால் முட்டிக்கொண்டும் சண்டையிட்டன. சரக்கு வாகனத்தில் வந்த குழுவினர், கம்பால் காளைகளை துரத்தியும், கயிறு வீசி கழுத்தில் பிணைத்தும், இழுத்துச்சென்றனர்.