/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழமைவாய்ந்த சதிக்கல்; கிராம மக்கள் வழிபாடு
/
பழமைவாய்ந்த சதிக்கல்; கிராம மக்கள் வழிபாடு
ADDED : ஆக 03, 2025 10:01 PM

பல்லடம்; பல்லடம் அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதிக்கல்லை, கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
பல்லடம் அடுத்த கரிசல்மடை கிராமத்தில் பழமை வாய்ந்த சதிக்கல் ஒன்று உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் இந்த சதிக்கல்லை வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆய்வு செய்த, பல்லடம் வரலாற்று ஆர்வலர் குழுவை சேர்ந்த மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:
கரிசல்மடை கிராமத்தில், காம்பிலி நதிக்கரையோரம் சிற்பங்கள் காணப்பட்டன. இவை, 300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரிய வந்தது. இதில், ஆண் மற்றும் பெண் சிலைகள் இடம்பெற்றுள்ளள.
ஆண் சிலை, போர்வீரன் அல்லது கிராமத் தலைவரையும்; உடன் இருக்கும் பெண் சிலை அவரது மனைவியையும் குறிக்கிறது. முந்தைய காலத்தில், கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. இந்தப்பழக்கம் 'சதி' என்று அழைக்கப்பட்டது.
கணவருடன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்ததை இந்த சிற்பம் எடுத்துரைக்கிறது. சிற்பத்தில் உள்ளவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்த கல்வெட்டுகளும் இங்கு இல்லை.
கைகூப்பிய நிலையில் ஆண் சிலையும், கையில் குடுவை மற்றும் பூச்செண்டு பிடித்தபடி பெண் சிலையும் உள்ளன. தங்கள் முன்னோர்களை பின்பற்றி, சிற்பங்களை வழிபட்டு வருவதாக இங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு, மகிழ்வேல் பாண்டியன் கூறினார்.