/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி ஊழியர் போராட்டம் வாபஸ்
/
அங்கன்வாடி ஊழியர் போராட்டம் வாபஸ்
ADDED : நவ 05, 2024 11:24 PM

திருப்பூர்; மாறுதல் வழங்கப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கலெக்டர் வழங்கிய பணியிட மாறுதல் உத்தரவு, ஒரு வாரத்துக்குள் ரத்து செய்யப்பட்டது.
இதை கண்டித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்றுமுன்தினம் மாலை துவக்கப்பட்டது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில், அங்கன்வாடி ஊழியர்கள் 500 பேர், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்கவேண்டும்.
கூடுதல் பொறுப்பு பார்த்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு, மூன்று நாட்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்கவேண்டும் என்பன உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகிலேயே அமர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள், நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று காலை, சமையல் பாத்திரங்கள், காய்கறிகளை கொண்டு உணவு தயாரிக்க முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், எதிரே உள்ள மண்டப வளாகத்துக்குள் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் அங்கன்வாடி பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே மாறுதல் செய்யப்பட்ட பணியிடத்துக்கே மீண்டும் பணி வழங்கப்படும்.
அக்., மாத சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.