/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் தேடி இடம் பெயரும் விலங்குகள்; வனப்பகுதிகளில் வறட்சியால் தவிப்பு
/
தண்ணீர் தேடி இடம் பெயரும் விலங்குகள்; வனப்பகுதிகளில் வறட்சியால் தவிப்பு
தண்ணீர் தேடி இடம் பெயரும் விலங்குகள்; வனப்பகுதிகளில் வறட்சியால் தவிப்பு
தண்ணீர் தேடி இடம் பெயரும் விலங்குகள்; வனப்பகுதிகளில் வறட்சியால் தவிப்பு
ADDED : பிப் 25, 2024 08:35 PM

உடுமலை;வனப்பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக, நடப்பாண்டு முன்னதாகவே வறட்சி நிலை துவங்கியுள்ளதால், குடிநீருக்காக யானை உள்ளிட்ட வன விலங்குகள் அலைமோதுகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரக பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், கடந்த சில மாதங்களாக போதிய மழையில்லாத நிலையில், தற்போது, வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.
இதனால், வன உயிரினங்கள், உணவு மற்றும் குடிநீருக்காக இடம் பெயர்ந்து வருகின்றன. இரு வனச்சரகங்களில் உள்ள, காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே, 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. தற்போது, அவையும் வறண்டு காணப்படுகின்றன.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், உடுமலை -- மூணாறு ரோட்டை கடந்து, அமராவதி அணைப்பகுதிக்கு, யானைகள், காட்டு மாடுகள், மான் கூட்டங்கள் வருகின்றன.
காமனுாத்து பள்ளம் பகுதி, யானைக்காடு, தளிஞ்சி பிரிவு பகுதி என பல்வேறு இடங்களில், ரோட்டை கடக்கின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், ஆபத்தை உணராமல், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் சென்று வருகின்றனர். வன விலங்குகளை பார்த்ததும், அவற்றை அச்சுறுத்தும் வகையில், ஒரு சிலர் செயல்படுகின்றனர்.
தொடர் போக்குவரத்து காரணமாக, யானை கூட்டம், மான் கூட்டம் ரோட்டை கடக்க பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் வசதியை வனப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே, அவற்றின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள, போர்வெல், சோலார் மின் மோட்டார் ஆகியவை முழுமையாக இயங்குவதை கண்காணிக்கவும், குடிநீர் தொட்டிகளில் நீர் இருப்பதை உறுதி செய்யவும் வனத்துறையினர் முன்வர வேண்டும்.

