/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி ரசீது தயாரித்து மோசடி: அப்பீல் மனு தள்ளுபடி
/
போலி ரசீது தயாரித்து மோசடி: அப்பீல் மனு தள்ளுபடி
ADDED : நவ 08, 2025 12:55 AM
திருப்பூர்: போலி ரசீது தயாரித்து மோசடி செய்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாவட்ட கோர்ட் உறுதி செய்தது. இது குறித்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பூரில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருபவர் பொன்னுசாமி, 65. இவரிடம் மணி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தங்கள் வாகனங்களுக்கு வரி செலுத்த பணம் கொடுத்தனர்.
அவற்றைப் பெற்றுக் கொண்ட பொன்னுசாமி, போக்குவரத்து துறை அலுவலர்கள் பெயரில் போலியாக கையொப்பமிட்டு, வரிகள் செலுத்தியதாக ரசீது வழங்கியுள்ளார். அது போலியானது என்பதும், அதே போல் பலரிடமும் பொன்னுசாமி இது போல் மோசடி செய்ததும் தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தனர். 2017ல் இந்தசம்பவம் தொடர்பான வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் கடந்தாண்டு, பொன்னுசாமிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்பட்டது. எஸ்.சி. - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சிறப்பு மாவட்ட கோர்ட்டில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ், அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, ஜே.எம். கோர்ட் அளித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார். அரசு சார்பில், வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.

