/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோள விதைகள் கிடைக்க ஏற்பாடு
/
மக்காச்சோள விதைகள் கிடைக்க ஏற்பாடு
ADDED : ஜன 09, 2025 11:23 PM
உடுமலை, ; குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு, தேவையான மக்காச்சோள வீரிய ஒட்டு ரக விதைகள் எளிதாக கிடைக்கும் வகையில், விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அத்துறையினர் கூறியதாவது: குடிமங்கலம் வட்டாரத்தில், மக்காச்சோளம் பிரதான பயிராக உள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு ரகமான கோ.எச்.எம்., 8 விதைகள் எளிதாக கிடைக்க, சோமவாரப்பட்டியை சேர்ந்த, விவசாயி பழனிசாமி என்பவரது விளைநிலத்தில் இப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
பெண் மக்காச்சோள விதையான யு.எம்.ஐ., 1230 நான்கு வரிசையிலும், ஆண் மக்கச்சோள விதையான யு.எம்.ஐ., 1201 இரு வரிசையிலும், மாறி, மாறி விதைக்கப்பட்டது.
பெண் வரிசையில் வரக்கூடிய ஆண் பூக்களை, தொடர்ச்சியாக, எவ்வித விடுபாடும் இல்லாமல் உடனுக்குடன், அகற்றப்பட்டு, ஆண் வரிசையிலும், பெண் பூக்கள் வாயிலாக அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.
இதனால், கோ.எச்.எம்., 8 என்ற வீரிய ஒட்டு ரகமான விதைகள் பெண் வரிசையிலுள்ள கதிர்கள் வாயிலாக பெறப்படுகிறது. இவ்விதைகள் ஆரஞ்ச், மஞ்சள் வண்ணத்தில் உட்புறம் சற்றே குழிவுடன் இருக்கும்.
பெண் வரிசையில் ஒடிக்கப்படும் கதிர், ஒவ்வொன்றையும் நிறம் மாறியவை, சரியாக கலப்பினம் ஆகாத கதிர்களை அகற்றி, கதிர்களில் இருந்து, கையினால், மக்காச்சோள விதைகள் பிரிக்கப்பட்டு, காய வைத்து, பின் சுத்தம் செய்யப்படுகிறது.
அதிலிருந்து விதை மாதிரி அனுப்பி, தரம் உறுதி செய்து, சான்று அட்டை பொருத்திய பின்னர், விவசாயிகளுக்கு வினியோகிக்கிறோம்.
இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.

