/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
62 வயதில் நிறைவேறிய 'வெள்ளித்திரை' ஆசை
/
62 வயதில் நிறைவேறிய 'வெள்ளித்திரை' ஆசை
ADDED : பிப் 09, 2025 12:45 AM

வெள்ளித்திரையில் மின்ன வேண்டும் என்ற ஆசை, மனோகரனுக்கு 62 வயதில் நிறைவேறியிருக்கிறது.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பை அள்ளிக் குவித்து வரும், மணிகண்டன் நடித்த 'குடும்பஸ்தன்' படத்தில், மருந்துக்கடை உரிமையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோகரனிடம் கனவு நிறைவேறிய பெருமிதம். அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
ஊட்டிதான் சொந்த ஊர். அப்போ ஊட்டியில நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும்; பாலு மகேந்திரா இயக்கத்தில் ஷூட்டிங் நடந்தபோது, அவரிடம் கை குலுக்கும் வாய்ப்பு கிடைச்சுச்சு. அவர் கூடவே போயிடணும்ன்னு கூட நினைச்சேன்.
வீட்டுல ஏதாவது ஒரு வேஷம் கட்டி நடிச்சு காண்பிப்பேன்; கூட பிறந்தவங்க ஏழு பேரு; என் பெற்றோர் உட்பட எல்லாரும் சிரிச்சு ரசிப்பாங்க.
படிப்பு முடிச்சதுக்கு அப்புறம், சினிமாவுல நடிக்கணும்ங்கற ஆசைல ரொம்ப அதிமாகிடுச்சு; சென்னைக்கு போனேன்; நிறைய கம்பெனிகள்ல எடுபிடி வேலை செஞ்சேன்; ரொம்ப கஷ்டப்பட்டேன்; அப்போதான் என் அப்பா, பணி ஓய்வு பெறக்கூடிய சமயம்.
'நமக்கு சொந்த வீடு, அது இதுன்னு எதுவும் இல்ல; நாம வாழறதுக்கு ஒரு மரத்தடி கூட கிடைக்காமையா போய்டும்ன்னு' என் அம்மா சொன்ன வார்த்தை, என்னை துாங்கவிடல; சென்னைக்கு 'பை' சொல்லிட்டு, ஊட்டிக்கு வந்தேன்.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில வேலைக்கு சேர்ந்தேன்; மத்திய அரசு வேலை. கலை மீது ஆர்வமுள்ள தொழிலாளர்களை இணைச்சு, கலைக்குழு ஆரம்பிச்சு நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
கடந்த, 2022ல் பணி ஓய்வு பெற்றேன். குறும்படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு, 7, 8 குறும்படங்கள்ல நடிச்சேன். அப்போ தான் 'நக்கலைட்ஸ்' யூடியூப் மூலமா தயாரிக்கிற 'குடும்பஸ்தன்' படத்துல நடிக்க நடிகர்களை தேர்வு செய்ய 'ஆடிஷன்' நடத்தினாங்க; நானும் கலந்துக்கிட்டேன்; நடிச்சு காண்பிச்சேன்.
படத்துல நடிக்கிற வாய்ப்பு கொடுத்தாங்க. சினிமாவுல நடிக்கணும்ங்கற என் சின்ன வயசு ஆசை, 62 வயசுல தான் நிறைவேறிச்சு. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் மனோகரன்.
மனோகரன், 'கூத்துப்பட்டறை' ஒருங்கிணைப்பாளராக, ஊர் ஊராக சென்று சாலை விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்.

