/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்டம்; நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்; விவசாயிகள் இன்று ஆலோசனை
/
அத்திக்கடவு திட்டம்; நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்; விவசாயிகள் இன்று ஆலோசனை
அத்திக்கடவு திட்டம்; நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்; விவசாயிகள் இன்று ஆலோசனை
அத்திக்கடவு திட்டம்; நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்; விவசாயிகள் இன்று ஆலோசனை
ADDED : ஆக 13, 2025 10:29 PM

அவிநாசி; அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், 2ம் கட்டம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி முதல்வர் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும், இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக நீர்வளத்துறை சார்பில் அத்திக்கடவு- - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் கடந்த 2019 டிச., மாதம் துவங்கப்பட்டது. திட்டப் பணிக்காக கடந்த, 2021-ம் ஆண்டு, 90 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம், 1,747 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஆக., 17-ம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திட்டத்தில் அனைத்து குளம், குட்டைகளுக்கும் முழுமையாக தண்ணீர் சென்று சேரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். உடுமலை வந்த முதல்வர் ஸ்டாலின், ஏழு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் அத்திக்கடவு-- அவிநாசி 2-ம் கட்ட திட்டம் தொடர்பாக அறிவிப்பு இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1045ல் 800 குட்டைகளுக்கே நீர்
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தொரவலுார் சம்பத்குமார் கூறியதாவது:
முதலாவது திட்டத்தில் ஆயிரத்து, 45 குளம், குட்டைகளில் வெறுமனே, 800 குட்டைகள் வரை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. ஓராண்டு ஆன நிலையில் அதிலேயே, 250 குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன. அதேபோல் திட்டத்தில், 6 நீரேற்று நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையத்துக்கும் ஒரு மின் இணைப்பு தான் இருக்கிறது. மாற்று மின் இணைப்பு இருந்தால், ஏதேனும் ஒரு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு உள்ளிட்ட சேதம் ஏற்பட்டால் தடுக்க முடியும்.
தற்போது, உடனடியாக தடுக்க முடியாத சூழல் உள்ளது. திட்டம் - 1-ல் விடுபட்டுள்ள, ஆயிரத்து, 400 க்கும் மேற்பட்ட குளம் குட்டைகளை ஒன்றிணைத்து அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் 2-க்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு வந்த முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய, மூன்று மாவட்ட மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் திட்டத்தை முழுமையாக விரிவுபடுத்த வேண்டும். இதுதொடர்பாக, போராட்டக்குழு நிர்வாகிகள் கூடி அவிநாசியில் நாளை (இன்று) மாலை, 5:00 மணிக்கு ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.