ADDED : அக் 16, 2025 11:35 PM

திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி நேற்று துவங்கியது. ஆர்வமுடன் 783 பேர் பங்கேற்றனர்; போட்டிகள் இன்று நிறைவு பெறுகிறது.
பள்ளி கல்வித் துறை மற்றும் திருப்பூர் மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில், மாவட்ட தடகள போட்டி, அவிநாசி அருகே அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய ஏழு குறுமைய தடகள போட்டி களில் முதல் இரண்டு இடங்களை பெற்ற பள்ளிகளின் வீரர், வீராங்கனைகள், 783 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றி, போட்டி களைத் துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மணி மாறன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். டீ பப்ளிக் பள்ளியின் இயக்குனர் டோரத்தி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டுப் போட்டிகளின் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஒருங்கிணைத்தனர்.
இதில், 14, 17 மற்றும், 19 வயது ஆகிய மூன்று வயது பிரிவினருக்கு 100, 200, 400, 800, 1500, 3000, 5000 மீ., ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டுஎறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. மொத்தம் 87 போட்டிகளை, உடற்கல்வி ஆசிரியர்கள், 118 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய போட்டி, மாலை, 6:00 மணி வரை நடந்தது; இன்றும் தொடர்ந்து போட்டிகள் நடக்கிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடங்களைப் பிடிப்பவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.