/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதில் பின்னடைவு :செம்மையான பட்டியல் தயாரிப்பதில் சிக்கல்
/
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதில் பின்னடைவு :செம்மையான பட்டியல் தயாரிப்பதில் சிக்கல்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதில் பின்னடைவு :செம்மையான பட்டியல் தயாரிப்பதில் சிக்கல்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதில் பின்னடைவு :செம்மையான பட்டியல் தயாரிப்பதில் சிக்கல்
ADDED : பிப் 16, 2024 11:28 PM
உடுமலை:லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆதார் இணைப்பில், மாவட்டத்தில், மடத்துக்குளம், உடுமலை தொகுதி முன்னணியில் இருந்தாலும், வாக்காளர்கள் பலர் 'ஆதார்' இணைக்காமல் உள்ளனர். போலி வாக்காளரை களைவதும், இரட்டைப்பதிவை தவிர்ப்பதும் சிக்கலாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியான இறுதிப்பட்டியலின்படி, மொத்தம் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர் உள்ளனர்.
இதில், உடுமலை தொகுதியில், 2 லட்சத்து, 60 ஆயிரத்து, 684 பேரும், மடத்துக்குளம் தொகுதியில், 2 லட்சத்து, 32 ஆயிரத்து, 141 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின் போதும், 'ஆதார்' இணைப்புக்கான படிவம், நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்பட்டு வந்தது. புதிய வாக்காளர்கள் பெரும்பாலும், பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போதே, 'ஆதார்' விபரங்களை அளித்து விடுகின்றனர்.
மாவட்டத்திலுள்ள, மொத்த வாக்காளரில் இதுவரை, 55.21 சதவீதம் பேர், அதாவது 12 லட்சத்து 94 ஆயிரத்து 544 வாக்காளர்கள் மட்டுமே 'ஆதார்' இணைத்துள்ளனர்.
மாவட்ட அளவில், 'ஆதார்' இணைப்பில், மடத்துக்குளம் தொகுதி முந்துகிறது. இத்தொகுதியில், மொத்த வாக்காளரில், ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 720 பேர், அதாவது 68.37 சதவீதம் பேர் ஆதார் இணைத்துவிட்டனர்.
உடுமலை தொகுதியில், மொத்த வாக்காளர்களில், ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 249 பேர், அதாவது, 62.77 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் இணைத்துள்ளனர்.
அவிநாசியில், 60.29 சதவீதம்; தாராபுரத்தில், 62.16 சதவீதம்; காங்கயத்தில், 60.01 சதவீதம்; திருப்பூர் தெற்கு தொகுதியில், 53.32, பல்லடம், 51.32, திருப்பூர் வடக்கு, 35.67 சதவீதம் 'ஆதார்' இணைத்துள்ளனர்.
ஒரு மித்த கருத்தில்லை
வாக்காளர் அட்டையுடன் 'ஆதார்' இணைப்பதில், அதிகாரிகள் முனைப்பு காட்டாததோடு, அரசியல் கட்சியினரிடம் ஒருமித்த கருத்து இல்லை.
பா.ஜ., உள்பட சில கட்சிகள், 'ஆதார்' இணைப்புக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றன; வேறு சில கட்சிகள் 'ஆதார்' இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
'ஆதார்' இணைப்பு, கட்டாயமாக்கப்படவில்லை. இதனால், 'ஆதார்' இணைப்பு வேகமெடுக்காமல் உள்ளது.
செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, சுருக்கமுறை திருத்த பணிகள் பல முறை மேற்கொள்ளப்பட்டாலும் கூட, போலி வாக்காளரை முழுமையாக நீக்கம் செய்வதில் சிக்கல் நீடித்துவருகிறது.
ஒரே தொகுதியில், பல இடங்களில் இரட்டை பதிவு இருந்தால், புதிய சாப்ட்வேர் வாயிலாக தேர்தல் கமிஷன் நீக்குகிறது. ஆனால், இறந்தவர்களை நீக்குவதில், தொடர்ந்து நடைமுறை சிக்கல் நீடித்து வருகிறது.
குடும்பத்தினர், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, இவ்வாறு பல பெயர்கள் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வருகிறது.
வெளி மாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைத்தால் மட்டுமே, போலி, இரட்டை பதிவு வாக்காளரை சுலபமாக அடையாளம் கண்டு நீக்கி, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடியும். தேர்தல் ஓட்டுப்பதிவையும் துல்லியமாக கணக்கிட முடியும்.