/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கு தடை; பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று நிம்மதி
/
வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கு தடை; பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று நிம்மதி
வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கு தடை; பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று நிம்மதி
வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கு தடை; பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று நிம்மதி
ADDED : மே 20, 2025 06:58 AM

திருப்பூர் : வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடுடன் தடை விதித்துள்ளதால், உள்நாட்டு சந்தைகள் காப்பாற்றப்படும் என, பின்னலாடை உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வங்கதேசம் மிகச்சிறிய நாடாகவும், பின்தங்கிய நாடாகவும் இருப்பதால், இந்தியா பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தது. குறிப்பாக, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.
பருத்தி பஞ்சை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து, துணியாகவும், ஆடையாகவும் மாற்றி, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவுக்கான ஆடை ஏற்றுமதி, 10 மடங்கு அதிகரித்துள்ளது.
உள்நாட்டு ஆயத்த ஆடை விலையுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு சந்தையில், வங்கதேச ஆடைகள் 25 முதல், 50 ரூபாய் விலை குறைவாக விற்கப்படுகின்றன. கடந்த, 2018ம் ஆண்டில், 500 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த, வங்கதேச ஆடை இறக்குமதி, 5,200 கோடியை தாண்டிவிட்டது.
உள்நாட்டு சந்தை வாய்ப்புகள் பறிபோகும் என்பதால், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வங்கதேச அரசியல் மாற்றத்தால், ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
தற்போது, தரை வழி ஆயத்த ஆடை இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், உள்நாட்டு சந்தைகள் பாதுகாக்கப்படும். கப்பல் வழி இறக்குமதிக்கு அதிகபட்ச கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''வங்கதேச ஆடை இறக்குமதியால், சர்வதேச சந்தைகளை போலவே உள்நாட்டு சந்தைகளிலும், கடும் போட்டி உருவாகிவிட்டது. விலை மலிவாக கொடுப்பதால், இந்திய ஆடை விற்பனை, ஐந்து ஆண்டுகளாக நெருக்கடியை சந்தித்து வந்தது. கப்பல் வழியாக அதிகளவில் வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இறக்குமதியாவதில்லை. நேரடியாக, தரைவழி போக்குவரத்தின் வாயிலாக மட்டும் வந்து கொண்டிருந்தது. தற்போது, தரை வழி வங்கதேச ஆடை இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், உள்நாட்டு சந்தையில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது,'' என்றார்.