/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்தில்... இடைவெளியில்லை!மூன்று சுற்றுக்கள் தொடர்ந்து வழங்கல்
/
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்தில்... இடைவெளியில்லை!மூன்று சுற்றுக்கள் தொடர்ந்து வழங்கல்
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்தில்... இடைவெளியில்லை!மூன்று சுற்றுக்கள் தொடர்ந்து வழங்கல்
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்தில்... இடைவெளியில்லை!மூன்று சுற்றுக்கள் தொடர்ந்து வழங்கல்
ADDED : அக் 02, 2025 10:39 PM

உடுமலை:பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு, மூன்று சுற்றுக்கள் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள், நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூலை, 27ம் தேதி, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
வரும், டிச., 9 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, 10 ஆயிரத்து, 250 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், மண்டல பாசன நிலங்களுக்கு, 21 நாட்கள் நீர் திறப்பு, ஏழு நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் நீர் வழங்கப்படும்.
நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை திருப்தியாக பெய்த நிலையில், திட்ட தொகுப்பு அணைகளில் நீர்மட்டமும் போதிய அளவு உள்ளது. அதோடு, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வாயிலாகவும், தொடர்ந்து தடையின்றி நீர் வரத்து உள்ளது.
இதனால், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தே காணப்படுவதால், நடப்பு நான்காம் மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி, மூன்று மாதமாக நீர் வழங்கப்படுகிறது.
நீர் திறப்பை தொடர்ந்து, 4ம் மண்டல பாசன பகுதிகளில், மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலையில், நிலைப்பயிராக தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கும், தடையின்றி நீர் வழங்கப்பட்டு வருகிறது.
பாசன பகுதிகளில், கடந்த இரு மாதமாக மழையில்லாத நிலையில், பாசனத்திற்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வருவதால், நிலைப்பயிர்களுக்கு பயன் அளித்து வருகிறது. இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நான்காம் சுற்றுக்கு எப்போது? அதிகாரிகள் கூறியதாவது: பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு திருப்தியாக உள்ளதோடு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கும் தடையின்றி நீர்வரத்து காணப்படுகிறது. இதனால், திருமூர்த்தி அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் பராமரிக்கப்பட்டு வருவதால், தொடர்ந்து மூன்று சுற்றுக்களுக்கு, இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த பல ஆண்டுகளுக்கு பின், தற்போது இவ்வாறு இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும், 23ம் தேதி வரை, மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட உள்ளது.
இந்த சுற்று முடிந்ததும், நான்காம் சுற்றுக்கு ஒரு வாரம் வரை இடைவெளி விட வாய்ப்புள்ளது. மீதம் உள்ள சுற்றுக்களுக்கும் நீர் வழங்கி, மண்டல பாசனம் முன்னதாகவே நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
திருமூர்த்தி அணை நிலவரம் திருமூர்த்தி அணையில், நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், நேற்று காலை, 45.33 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,342.29 மில்லியன் கனஅடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு, 872 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்கு, 1,166 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.