/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூணாறு ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு தொடர் விடுமுறையால் வாகனங்கள் அணிவகுப்பு
/
மூணாறு ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு தொடர் விடுமுறையால் வாகனங்கள் அணிவகுப்பு
மூணாறு ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு தொடர் விடுமுறையால் வாகனங்கள் அணிவகுப்பு
மூணாறு ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு தொடர் விடுமுறையால் வாகனங்கள் அணிவகுப்பு
ADDED : அக் 02, 2025 10:43 PM

உடுமலை;தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணியர் திரண்டதால், உடுமலை - மூணாறு ரோட்டில், ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தொடரும் நெரிசலுக்கு தீர்வு காண, இந்த ரோட்டை மேம்படுத்த வேண்டும்.
உடுமலையிலிருந்து, மறையூர், காந்தலுார், மூணாறு செல்லும் ரோடு, தமிழக - கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ளது.
இப்பகுதிகள் சுற்றுலா மையமாக உள்ளதால், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை, வார விடுமுறை காலங்களில், பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இதில், உடுமலையிலிருந்து சின்னாறு, மறையூர் செல்லும் ரோடு, ஒரு வழிப்பாதையாக உள்ளதோடு, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல்,குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
மேலும், முழுவதும் மலைப்பகுதியாக உள்ளதால், ரோட்டோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளமாக மாறியுள்ளது. அதே போல், இந்த ரோட்டில் உள்ள எஸ்-வளைவுகளும், பக்கவாட்டு பாதுகாப்பு சுவர்கள் இல்லாமலும், குறுகியதாகவும் ஆபத்தான முறையில் உள்ளது.
ஒரு வாகனம் செல்லும் போது, எதிரே வரும் வாகனத்திற்கு வழி கொடுக்க முடியாத அளவிற்கு, மிகப்பெரிய சிக்கல் உள்ளது.
சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, மறையூர், காந்தலுார் சுற்றுப்பகுதியிலுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மருத்துவம், உணவு பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் உடுமலையை சார்ந்து உள்ளதால், பொதுமக்களுக்கும் அத்தியாவசியமான ரோடாக உள்ளது.
இந்நிலையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக, இரு நாட்களாக சுற்றுலா வாகனங்கள் அதிகளவு உடுமலை, மறையூர், மூணாறு செல்கின்றன.
நேற்று, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த குறுகிய ரோட்டில் பயணித்த நிலையில், குறுகிய ரோடு காரணமாக, போக்குவரத்து நெரிசலும், ஊர்ந்து செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது.
இதனால், உடுமலையிலிருந்து மறையூர் செல்வதற்கு, ஒரு வாகனத்திற்கு ஆறு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. அடர்ந்த வனப்பகுதியில், வாகனங்கள் ஊர்ந்து செல்வதும், நெரிசல், அதிக ஒலி காரணமாக, வன விலங்குகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாட சென்ற மக்கள், வேதனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், மறையூரிலிருந்து, உடுமலைக்கு வர வேண்டிய அரசு பஸ்களும், பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழக - கேரள என இரு மாநில, பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்களுக்கு செல்லும் இந்த ரோட்டை மேம்படுத்த, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.