/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெரியகுளத்தை பாதுகாக்க கம்பி வேலி; சமூகவிரோத செயல்களால் பாதிப்பு
/
பெரியகுளத்தை பாதுகாக்க கம்பி வேலி; சமூகவிரோத செயல்களால் பாதிப்பு
பெரியகுளத்தை பாதுகாக்க கம்பி வேலி; சமூகவிரோத செயல்களால் பாதிப்பு
பெரியகுளத்தை பாதுகாக்க கம்பி வேலி; சமூகவிரோத செயல்களால் பாதிப்பு
ADDED : செப் 19, 2025 08:12 PM

உடுமலை; பெரியகுளம் கரையில் அதிகரித்து வரும், சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பொதுப்பணித்துறையினர் கம்பி வேலி அமைத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட பெரியகுளம், 404 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், இக்குளத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
சுற்றுப்பகுதியிலுள்ள, பல ஆயிரம் ஏக்கருக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள குளத்தின் கரையில், பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருமூர்த்திமலை ரோட்டில் வாளவாடி பிரிவு அருகே துவங்கி, பல கி.மீ., தொலைவுக்கு குளத்தின் கரை அமைந்துள்ளது. அனைத்து நேரங்களிலும், 'குடி'மகன்கள் கரையில் அமர்ந்து மது அருந்தி விட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அங்கேயே வீசிச்செல்கின்றனர்.
குளத்தின் ஷட்டர் மற்றும் தண்ணீருக்குள் வீசப்படும் மதுபாட்டில்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதே போல், கழிவுகளையும் கரையில் வீசி தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால், கரையிலுள்ள பனை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பாதிக்கிறது. குளத்துக்கு வலசை வரும் பறவைகளும் பாதிக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் பாசன முக்கியத்துவம் வாய்ந்த இக்குளத்தை பாதுகாக்க, பொதுப்பணித்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீண்ட காலமாக இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'பெரியகுளம் கரையை வலுப்படுத்தி, கம்பி வேலி அமைத்தால் சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். பொதுப்பணித்துறையினர் இது குறித்து கருத்துரு தயாரித்து, அரசின் கவனத்துக்கு அனுப்ப வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த குளத்தை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் ,' என்றனர்.