/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடைகளை மூடறாங்க; மனமகிழ் மன்றம் திறக்கறாங்க! அவிநாசியில் 'விடாத கருப்பாக' தொடரும் மது விற்பனை விவகாரம்
/
மதுக்கடைகளை மூடறாங்க; மனமகிழ் மன்றம் திறக்கறாங்க! அவிநாசியில் 'விடாத கருப்பாக' தொடரும் மது விற்பனை விவகாரம்
மதுக்கடைகளை மூடறாங்க; மனமகிழ் மன்றம் திறக்கறாங்க! அவிநாசியில் 'விடாத கருப்பாக' தொடரும் மது விற்பனை விவகாரம்
மதுக்கடைகளை மூடறாங்க; மனமகிழ் மன்றம் திறக்கறாங்க! அவிநாசியில் 'விடாத கருப்பாக' தொடரும் மது விற்பனை விவகாரம்
ADDED : மார் 17, 2024 12:04 AM

- நமது நிருபர் -
ஆன்மிக நகர் என்று அறியப்படும் 'காசியில் வாசி அவிநாசி' என பிரசித்தி பெற்ற அவிநாசியில், மது விற்பனைக்கு முக்கியத்துவம் வழங்குவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது.
கோவை - திருப்பூர் நெடுஞ்சாலையில் பல்வேறு மாவட்டங்களின் மையப் பகுதியாக உள்ள அவிநாசி, வளர்ந்து வரும் நகரமாக உருவெடுத்து வருகிறது. ஆன்மிக நகரம் என பெயர் பெற்ற அவிநாசியில், சத்தமில்லாமல் அதிகரிக்கும் மதுக்கடைகள், மக்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
அவிநாசி நரிக்குறவர் காலனி, ரங்கா நகர், மங்கலம் ரோடு, கால்நடை மருத்துவமனை எதிர்புறம், நாதம்பாளையம் பிரிவு, கந்தம்பாளையம் பிரிவு, வெள்ளியம்பாளையம், நம்பியாம்பாளையம், கருவலுாரில் தலா, ஒரு மதுக்கடை, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் எதிர் எதிர் சாலைகளில், 2 கடைகள் என, 11 கடைகள் உள்ளன. ஏற்கனவே, 14 'டாஸ்மாக்' கடைகள் இருந்த நிலையில், அதில் மூன்று கடைகள் மூடப்பட்டன.
இதுதவிர, மூன்று தாபா ரெஸ்டாரன்டுகளில்,'எப்.எல்.2' எனப்படும் மனமகிழ் மன்றங்கள் செயல்படுகின்றன; அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது, விதி. ஆனால், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், அவிநாசியில் தேவைக்கு அதிகமாகவே மதுக்கடைகள் உள்ள நிலையில், தற்போது, கூடுதலாக மூன்று, மனமகிழ் மன்றங்களை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், சேவூர் பகுதியில் செயல்பட்ட ஒரு மனமகிழ் மன்றத்துக்கு சேவூர், முறியாண்டம்பாளையம், வேட்டுவபாளையம் ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த மனமகிழ் மன்றம் தான், அவிநாசி - சேவூர் சாலையில், சிந்தாமணி பகுதியில் திறக்கப்பட இருக்கிறது.
அதே போன்று, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், கால்நடை மருத்துவமனை அருகே என, இரண்டு எப்.எல். -2 வகை, மனமகிழ் மன்றம் திறக்க, போலீசாரின் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
பள்ளி, சர்ச் அருகில்...
சிந்தாமணி தியேட்டர் பகுதியில் திறக்க இருக்கிற மனமகிழ் மன்றத்துக்கு, அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 2 ஆயிரம் மாணவியர் படிக்கும் புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சர்ச், கோவில் உள்ள இடமாகவும், ஏராளமான கடைகள் நிறைந்த பகுதியாகவும் சிந்தாமணி பகுதி உள்ளது.
காலை நேரங்களில், வேலைக்கு செல்வதற்காக நுாற்றுக்கணக்கில் கட்டுமான தொழிலாளர்கள் கூடி நிற்கும் இடமாகவும் அப்பகுதி உள்ளது. எனவே, அங்கு மனமகிழ் மன்றமோ, டாஸ்மாக் கடை என, எதை திறந்தாலும், தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.
ஏற்கனவே, அவிநாசி - சேவூர் சாலையில், காமராஜ் நகர் பகுதியில் மனமகிழ் மன்றம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி, மக்கள் ஆட்சேபனையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 'மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியில் இருந்து, சற்று தள்ளி மதுக்கடை, மனமகிழ் மன்றம் வைப்பதே, பாதிப்பை தவிர்க்கும்.
மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்மிகத்துக்கு பெயர் போன அவிநாசி நகரில், இத்தனை மதுக்கடைகளும், மனமகிழ் மன்றங்களும் அவசியம் தானா' என்கின்றனர் பொதுமக்கள்.

