/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேட்டரி வாகனம் மீண்டும் இயக்கம்
/
பேட்டரி வாகனம் மீண்டும் இயக்கம்
ADDED : செப் 27, 2025 12:05 AM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் மாற்றத்திறனாளிகள், முதியவர்களின் பயன்பாட்டுக்காக சமூக பாதுகாப்புத்துறை சார்பில் பேட்டரி வாகனம் இயக்கப்பட்டு வந்தது.
குறைகேட்பு கூட்டம் நடைபெறும் திங்கட் கிழமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும், இந்த வாகனம் இயக்கப்படும். மிகவும் பயனுள்ள இந்த பேட்டரி வாகனம், கடந்த ஓராண்டாக செயல்பாடின்றி, கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் ஓரங்கட்டி நிறுத்திவைக்கப்பட்டது.
இதனால், கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் கால்வலிக்க நீண்ட துாரம் நடத்துவரவேண்டிய நிலை தொடர்ந்தது. பேட்டரி வாகனத்தை மீண்டும் இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பேட்டரி வாகனம் பழுது நீக்கம் செய்யப்பட்டு, நேற்றுமுதல் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், சக் ஷம் அமைப்பு செயற்குழு உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர், துவக்கி வைத்தனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் கூறியதாவது:
கலெக்டர் உத்தரவுப்படி, பேட்டரி வாகனம் சரி செய்யப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட ம் நடைபெறும் திங்கள் கிழமைகளில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த வாகனத்தில் அழைத்து வரப்படுவர்.
மாற்றுத்திறனாளி களுக்கு அடையாள அட்டைக்கான மருத்துவ முகாம் நடைபெறும் நாட்கள் மட்டுமின்றி இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறுவகை நேர்காணல் நடைபெறும் நாட்களில், இந்த வாகனம் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.