/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேட்டிங், பந்துவீச்சு; பலம் காட்டிய வீரர்கள்
/
பேட்டிங், பந்துவீச்சு; பலம் காட்டிய வீரர்கள்
ADDED : செப் 14, 2025 11:49 PM

திருப்பூர்; நிப்ட்- டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில், அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் கேசவன் பந்துவீச்சிலும், எஸ்.டி., வாரியர்ஸ் அப்துர் ரஹ்மான், பேட்டிங்கிலும் அதிரடி காட்டினர்.
நிப்ட்-டீ கல்லுாரி, தினமலர் நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட் சார்பில், அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், திருப்பூரில் நடைபெற்றுவருகிறது.
முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் நிடைபெற்று வரும் இந்த தொடரில், 20 பின்னலாடை உற்பத்தி நிறுவன அணிகள் பங்கேற்று மோதிவருகின்றன.
கடந்த ஆக. 9 முதல், 15 ஓவர் கொண்ட லீக் போட்டிகள் நடை பெற்றுவருகின்றன. நேற்று நடைபெற்ற நான்கு போட்டிகளில், எட்டு அணிகள் பங்கேற்று விளையாடின.
முதல் போட்டியில், அனுகிரஹா பேஷன் - அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அனுகிரஹா, பத்து விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது; அடுத்து ஆடிய அமேசிங், 6 விக்கெட் இழப்பில் 78 ரன்னுடன் வெற்றியை வசமாக்கியது. மூன்று ஓவர் பந்து வீசி, 14 ரன் மட்டும் கொடுத்து, 4 விக்கெட் வீழ்த்திய அமேசிங் அணியின் பவுலர் கேசவன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தினேஷ் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் அணி, தங்கமன் பேஷன்ஸ் அணியுடன் விளையாடியது. 'டாஸ்' வென்ற தினேஷ் டெக்ஸ்டைல்ஸ், பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தங்கமன் அணி, அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து, 83 ரன் எடுத்தது; அடுத்து ஆடிய தினேஷ் டெக்ஸ்டைல்ஸ், விக்கெட் ஏதும் இழப்பின்றி, 84 ரன்னுடன் வெற்றிபெற்றது.
பேட்டிங்கில், 28 பந்துக்கு 38 ரன் எடுத்ததோடு, பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்திய தினேஷ் டெக்ஸ்டைல்ஸ் வீரர், பிரகாஷ் ராமகிருஷ்ணன், ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வாகினார்.
மற்றொரு போட்டியில், எஸ்.டி., வாரியர்ஸ் - பிராச்சி எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த எஸ்.டி., வாரியர்ஸ், 6 விக்கெட் இழப்புக்கு, 136 ரன் குவித்தது. அப்துர் ரஹ்மான், 38 பந்தில் 8 பவுண்டரி; 3 சிக்ஸர் உள்பட 67 ரன் விளாசினார். அடுத்து ஆடிய பிராச்சி அணி, 92 ரன்னுடன் ஆட்டமிழந்தது. அப்துர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்வானார்.
நான்காவது போட்டியில், விக்டஸ் டையிங் - டெக்னோ ஸ்போர்ட் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெக்னோ அணி, 75 ரன்னில் ஆட்டம் இழந்தது. பேட்டிங் செய்த விக்டஸ் அணி, மூன்று விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பேட்டிங்கில், 18 பந்துக்கு 22 ரன் எடுத்ததோடு, பந்துவீச்சில், 2 விக்கெட் வீழ்த்திய விக்டஸ் வீரர் மகேந்திர மணி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.