/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வளைந்து கொடுப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு'
/
'வளைந்து கொடுப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு'
ADDED : டிச 16, 2024 12:25 AM
திருப்பூர்; திருப்பூர் அய்யப்பன் கோவிலில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. தினமும் பல்வேறு பூஜை வழிபாடுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.
கடந்த 13ம் தேதி திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து கூட்டு வழிபாடும் நடந்தது. இன்று லட்சார்ச்சனை துவங்குகிறது; வரும் 18 ம் தேதி புஷ்ப அபிேஷக பூஜை நடக்க உள்ளது.
மண்டல பூஜையின் ஐந்தாவது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஸ்ரீசபரி அய்யப்பா சேவா டிரஸ்ட் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், புலவர் ராமலிங்கம் தலைமையில், ஆன்மிக பட்டிமன்றம் நடந்தது.
'வாழ்வில் வெற்றி தேவை... வளைந்து கொடுப்பதா? நிமிர்ந்து நிற்பதா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. புலவர் ராமலிங்கம் நடுவராக இருந்தார்; 'வளைந்து கொடுப்பதே' என்ற அணியில், கோவை தமிழரசன், நித்ய பிரியா பேசினர். 'நிமிர்ந்து நிற்பதே' என்ற அணியில், ராஜபாளையம் ராஜ்குமார், சென்னை ஜெயஸ்ரீ ஆகியோர் பேசினர்.
நடுவர் ராமலிங்கம் பேசுகையில், ''குடும்பத்திலும் சரி, அலுவலக பணிகளிலும் சரி, வெற்றி பெற வேண்டுமெனில் பல்வேறு யுத்தியை கடைபிடிக்க வேண்டும். எப்போதும் நிமிர்ந்து நிற்பேன் என்று பிடிவாதமாக இருக்கக்கூடாது.
பணியிடத்திலும் சரி, வீட்டிலும் சரி, வளைந்து கொடுத்து செல்வதே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்; அதுவே வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொடுக்கும்,'' என்றார்.

