/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐரோப்பிய நாடுகளின் சட்டப்பூர்வமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய 'புளூசைன் லேபிள்'
/
ஐரோப்பிய நாடுகளின் சட்டப்பூர்வமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய 'புளூசைன் லேபிள்'
ஐரோப்பிய நாடுகளின் சட்டப்பூர்வமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய 'புளூசைன் லேபிள்'
ஐரோப்பிய நாடுகளின் சட்டப்பூர்வமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய 'புளூசைன் லேபிள்'
ADDED : ஆக 06, 2024 11:22 PM
திருப்பூர் : ''புளூசைன்' சான்றிதழ் மற்றும் 'லேபிள்' இருந்தால், ஐரோப்பிய நாடுகளின் சட்டப்பூர்வமான எதிர்பார்ப்புகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியும்,'' என, ஆயத்த ஆடை, வீட்டு அலங்கார ஜவுளி பொருள் உற்பத்தி திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஜவுளி இறக்குமதியில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அதற்காக, 'கார்பன் புட்பிரின்ட்' என்ற தரச்சான்று பெற வேண்டியது, அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் கட்டாயமாகி உள்ளது. அதாவது, பஞ்சு வாங்கி நுாலாக மாற்றுவதில் துவங்கி, ஆயத்த ஆடை தயாரித்து பேக்கிங் செய்வது வரையிலான உற்பத்தி பணியில், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், 'கார்பன் புட் பிரின்ட்' என்ற அளவீடு முறை பின்பற்றப்படுகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், கடந்த 15 ஆண்டுகளாகவே, நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி என்ற 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தியை பின்பற்றி வருகின்றனர். இதனால், ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளின், தரக்கட்டுப்பாடு உத்தரவுகளை எளிதாக ஏற்று செயல்படுத்தும் திறனுடன் திருப்பூர் காத்திருக்கிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கேற்ப உற்பத்தி வழிமுறைகளை திருத்திஅமைக்க ஏதுவாக, புதிய 'இ-லேர்னிங்' என்ற 'ஆன்லைன்' கற்றல்முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் இயங்கும், ஆயத்த ஆடை, அலங்காரம் மற்றும் வீட்டு அலங்கார ஜவுளி பொருள் உற்பத்தி திறன் கவுன்சில், சுவிட்சர்லாந்து 'புளூசைன்' என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஏற்றுமதியாளர்களுக்கு, எட்டு வார பயிற்சி அளிக்க உள்ளது. அதற்காக, திருப்பூர், பெங்களூரு உட்பட, ஏழு தொழில் நகரங்களில் சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்கார ஜவுளி பொருட்கள் உற்பத்தி திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 'கார்பன் புட் பிரின்ட்' என்ற விதிமுறையை அமல்படுத்த உள்ளனர். அதற்காக, 'புளூசைன்' நிறுவனம், வளர்ந்த நாடுகளில் இயங்கும் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெற்றது. 'புளூசைன்' சான்றிதழ் மற்றும் 'லேபிள்' இருந்தால், ஐரோப்பிய நாடுகளின் சட்ட எதிர்பார்ப்புகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியும்.
முதல்கட்டமாக, எட்டு வாரகால 'ஆன்லைன்' வகுப்பு நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, தொழில்துறையினர், 'புளூசைன்' லேபிள் பெறலாம். முழுமையான உற்பத்தி படிநிலைகளை ஆராய்ந்து பார்த்து, அந்நிறுவனம் சான்றிதழ் வழங்கும். அந்நிறுவனத்தின், 'லேபிள்' பயன்படுத்த அங்கீகாரம் பெற்றால், திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு, ஐரோப்பிய நாடுகளில் அதிக வரவேற்பு கிடைக்கும்.
விரைவில், 'கார்பன் புட் பிரின்ட்' சட்டம் ஐரோப்பிய நாடுகளில் அமலாக இருப்பதால், 'புளூசைன்' லேபிள் பெறுவதன் மூலமாக, அந்நாட்டு வர்த்தகர்களின் வரவேற்பை பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.