/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போனஸ் பட்டுவாடா துவங்கியது! பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
/
போனஸ் பட்டுவாடா துவங்கியது! பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
போனஸ் பட்டுவாடா துவங்கியது! பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
போனஸ் பட்டுவாடா துவங்கியது! பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 06, 2025 12:44 AM

திருப்பூர்:பனியன் தொழிலாளருக்கு போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது. தீபாவளி பண்டிகைக்கு ஆடை, வீட்டு உபயோக பொருள் வாங்க வந்தவர்களால் கடை வீதிகள் நேற்று மக்கள் கூட்டத்தால் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை, 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொழிலாளருக்கு, சனிக்கிழமை சம்பளத்துடன் சேர்த்து போனஸ் வழங்குவது திருப்பூரில் வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் சம்பளம் வழங்கும் போது, 20 சதவீத நிறுவனங்கள் போனஸ்வழங்கியுள்ளன.
அதாவது, அமெரிக்க ஆர்டர் இழப்பால் பாதித்த நிறுவனங்கள், முன்கூட்டியே போனஸ் கொடுத்து, தொழிலாளர்களுக்கு, 10 முதல் 15 நாட்கள் வரை, தீபாவளி பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன.
வரும், 11ம் தேதி சம்பளத்துடன், 70 சதவீத தொழிலாளருக்கு போனஸ் வழங்கி முடிக்கப்படும்; மீதியுள்ள தொழிலாளருக்கு 15ம் தேதிக்கு பிறகு வழங்க, சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அவசரமாக முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இருப்பதால், தொழிலாளரை தக்க வைக்க வேண்டி, 15ம் தேதிக்கு பிறகு, பனியன் நிறுவன அலுவலர், பணியாளர் மற்றும் தொழிலாளருக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இருப்பினும், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டதால், அதனை கொண்டு தீபாவளி 'பட்ஜெட்'டை நிறைவேற்ற தொழிலாளர் குடும்பங்கள் தயாராகிவிட்டன.
குடும்பத்தினருக்கு ஜவுளி எடுப்பது, பழைய மொபைல் போனை மாற்றுவது, வீட்டுக்கு தேவையான, மிக்ஸி, கிரைண்டர், 'டிவி', வாஷிங் மெஷின், 'பிரிட்ஜ்', பீரோ, கட்டில், டைனிங்டேபிள், டிரஸ்ஸிங் டேபிள் போன்ற பர்னிச்சர் வாங்கவும் தொழிலாளர்கள் நேற்று திருப்பூர் வந்திருந்தனர்.
காலை, 10:00 மணிக்கு துவங்கி, இரவு, 9:00 மணி வரை, பொதுமக்கள் கூட்டத்தால், திருப்பூர் கடைவீதிகள் களைகட்டியிருந்தன. குறிப்பாக, ஜவுளிக்கடைகளில், சிறப்பு பரிசு வழங்குவதால், கூட்டம் அலைமோதியது. தீபாவளி சிறப்பு விற்பனையாக, அதிரடியான தள்ளுபடி விலையுடன் விற்பனை சூடுபிடிக்க துவங்கிவிட்டது.
இருப்பினும், வரும் நாட்களில், பெரிய நிறுவனங்கள் போனஸ் பட்டு வாடாவை துவக்க உள்ளன. இதனால், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது, தினமும் திருப்பூரில் கூட்டம் அலைமோதும். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, திருப்பூர் மாநகர போலீசாரும் திட்டமிட்டுள்ளனர்.
பனியன் பஜார் 'ஜோர்'
ஜவுளி எடுக்க வந்த மக்கள், காதர்பேட்டை பகுதிகளில் உள்ள பனியன் பஜாரில், பின்னலாடைகள், இரவு நேர ஆடைகள், உள்ளாடைகள் வாங்கவும் குவிந்தனர். இதனால், நஞ்சப்பா ரோடு பகுதியிலும் கூட்டம் அலைமோதியது.
காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில், மதியம், 2:15 மணிக்கு, மிதமான மழை பெய்தது.இதனால், ரோட்டோர வியாபாரிகள் கலக்க மடைந்தனர். இருப்பினும், சில நிமிடங்களில் மழை நின்றதால், நிம்மதியடைந்து மீண்டும் கடை விரித்து வியாபாரத்தை துவக்கினர்.