திடக்கழிவு மேலாண்மையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திடக்கழிவு மேலாண்மையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : நவ 01, 2026 09:11 PM

பல்லடம்: விதிமுறை மீறி திடக்கழிவு மேலாண்மை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள், கருப்பு பேட்ச் அணிந்து வந்து மனு கொடுத்தனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட, அருள்புரம் உப்பிலிபாளையம், அக்ரி காலனி, அம்மன் நகர், ஜே.ஜே.,காலனி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சிக்கு உட்பட்ட, அல்லாளபுரத்தில் இன்று (நவ.,1) நடந்த கிராமசபை கூட்டத்தில், கருப்பு பேட்ச் அணிந்தபடி பங்கேற்றனர்.
மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சிக்கு உட்பட்ட அக்ரி காலனி பகுதியில், இப்பகுதியில் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் பொதுக் கிணறு உள்ளது. இந்த இடம் பயன்பாட்டில் உள்ள அம்மா பூங்கா இடம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில், ஊரமைப்பு சட்ட விதிகள் மற்றும் அரசாணைகளின்படி, திடக்கழிவும் மையங்கள் அல்லது உரக்குழிகள் அமைக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால், சட்ட விதிமுறைகளை முற்றிலும் புறந்தள்ளி, குடிநீர் கிணற்றிலிருந்து, 24 மீ., தொலைவிலேயே குழி தோண்டி, அதில் குப்பைகளை கொட்டி நீர் ஆதாரத்தை பாழ்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. பொது மக்களின் கடும் எதிர்ப்பால் இச்செயல் நிறுத்தப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி, பொது மக்களின் குடிநீரை அசுத்தப்படுத்த முயன்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட கோரிக்கையை இந்த கிராம சபா கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
