/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகல் விளக்கு தயாரிப்பவர்கள் வாழ்வில்... ஒளி கிடைக்குமா? மூலப்பொருள் எடுக்க தொடர் போராட்டம்
/
அகல் விளக்கு தயாரிப்பவர்கள் வாழ்வில்... ஒளி கிடைக்குமா? மூலப்பொருள் எடுக்க தொடர் போராட்டம்
அகல் விளக்கு தயாரிப்பவர்கள் வாழ்வில்... ஒளி கிடைக்குமா? மூலப்பொருள் எடுக்க தொடர் போராட்டம்
அகல் விளக்கு தயாரிப்பவர்கள் வாழ்வில்... ஒளி கிடைக்குமா? மூலப்பொருள் எடுக்க தொடர் போராட்டம்
ADDED : நவ 13, 2024 06:31 AM

உடுமலை: தங்கள் வாழ்வாதாரமாக உள்ள அகல் விளக்குகள் தயாரிக்க, குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்கி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில், பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபடும் குடும்பத்தினர் அதிகளவு இருந்தனர்.
மண்பானைகள் பயன்பாடு குறைந்தது மற்றும் மண் எடுப்பதில் சிக்கல்; நிலையான வருவாய் இல்லாதது உட்பட காரணங்களால், பல குடும்பத்தினர், மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது, மரிக்கந்தை, புக்குளம், பள்ளபாளையம், பூளவாடி, கண்ணமநாயக்கனுார், சாளையூர், ஜல்லிபட்டிஉட்பட கிராமங்களில் மட்டும் போதிய லாபம் கிடைக்காவிட்டாலும், பாரம்பரியத்தை கைவிடாமல், மண்பானை, அகல் விளக்கு, உருவார பொம்மைகள் தயாரிப்பில், சில குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக, அகல் விளக்கு உற்பத்தி உள்ளது.அதன்படி, தற்போது, கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு தேவையான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
நாள்முழுவதும், குடும்பத்தில் இருவர் வேலை செய்தாலும், 500 ரூபாய்க்கும் குறைவான வருமானமே, இவர்களுக்கு கிடைத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அகல் விளக்கு மற்றும் பானைகள் செய்ய, மண் தேர்வு முக்கியமானதாகும். அதன்படி கிணத்துக்கடவு கோதவாடி குளம் மற்றும் கொழுமம் குளத்தில் மட்டுமே, மண்பாண்டங்கள் உற்பத்திக்கான பிரத்யேகமான மண் கிடைக்கிறது.
தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மண்ணை, டிராக்டர்கள் வாயிலாக எடுத்து வந்து இருப்பு வைத்தால், ஆண்டு முழுவதும், உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். ஆனால், மண் அள்ள, வருவாய்த்துறையினர் அனுமதி வழங்க பல்வேறு நடைமுறைகளை தெரிவிக்கின்றனர்.
மண் எடுக்கவே போராட வேண்டியுள்ளதால், இத்தொழிலில் உள்ள சில குடும்பத்தினரும் மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அடையாள அட்டை
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
பீங்கான் அகல் விளக்குகள் வருகைக்குப்பிறகு, மண் விளக்குகளை யாரும் ஆர்வத்துடன் வாங்குவதில்லை. இருப்பினும், கிராம மக்களின் தேவைக்காக, சீசனில் மட்டும், பாரம்பரியத்தை கைவிடாமல், விளக்கு உற்பத்தி செய்கிறோம்.
குளங்களில் மண் எடுக்க அதிகாரிகள் உறுதியளித்தாலும், அதற்கான அனுமதி கடிதம் எதுவும் வழங்குவதில்லை. இதனால், மண் எடுக்க முடியாமல், தொழில் முடங்குகிறது.
மண்ணில், மண்பானை, அகல்விளக்கு, உருவார பொம்மைகள் செய்வது தனித்துவம் வாய்ந்த கலையாகும். குறித்த நேரத்தில் மண் எடுக்க முடியாவிட்டால், திருவிழா சீசன் முடிந்து, வருவாயை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
இந்த சீசனில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் வகையில், குளங்களில் இருந்து மண் அள்ளுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
நலவாரியம் வாயிலாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சீசன் துவங்கும்முன், குறிப்பிட்ட அளவு மண் எடுத்தால், அதை இருப்பு வைத்து, தொய்வில்லாமல் பணிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.