/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் பரிசோதனை மொபைல் வாகனம் தயார்!
/
புற்றுநோய் பரிசோதனை மொபைல் வாகனம் தயார்!
ADDED : பிப் 15, 2025 07:10 AM

இயந்திரங்களோடு பின்னிப்பிணைந்த திருப்பூர் நகர மக்களின் வாழ்க்கை சூழலில், நோய் பரவல் என்பது அச்சுறுத்தலாக மாறி வருகிறது. திருப்பூரில், தினம், தினம் புதிது புதிதாக மருத்துவமனைகள் திறக்கப்படுவதே, இதற்கு சாட்சி.
உயிர்காக்கும் சிகிச்சை வழங்குவதில் ஒவ்வொரு மருத்துவமனைகளும் முனைப்புக் காட்டி வரும் அதே நேரம், 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில், உடல் ஆரோக்கியம் மீதும் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அறிவுறுத்துகின்றனர், மருத்துவர்கள்.
குறிப்பாக, 'திருப்பூரில், பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு, அதிகரித்து வருகிறது' என்கின்றன புள்ளிவிபரங்கள். 'தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், தங்கள் உடல் நலன் மீது அக்கறை காட்ட வேண்டும்' என்ற நோக்கில், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, மொபைல் வாகனம் வாயிலாக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது, ரோட்டரி அமைப்பு.
ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது; மொபைல் வாகனம் வாயிலாக இதுவரை, 4,000 பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது, தெரிவது இல்லை; அதை அறிந்துக் கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டுவதுமில்லை. நோய் முற்றிய பின் குணப்படுத்துவது கடினம்.
ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்துவிட்டால், முற்றிலும் குணப்படுத்த முடியும். இந்த வாகனத்தில் பெண் மருத்துவர், செவிலியர்கள் தான் பரிசோதனை செய்வர். எவ்வித தயக்கமும், அச்சமுமின்றி பரிசோதனை செய்து கொள்ளலாம். சிகிச்சை தேவைப்படுவோர், 98412 97700 என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.