/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலையடிவாரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
/
மலையடிவாரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
மலையடிவாரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
மலையடிவாரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
ADDED : பிப் 03, 2025 05:01 AM
உடுமலை : மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள, கிராமங்களில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே, மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில், பொன்னாலம்மன் சோலை, ஆண்டியூர், பாண்டியன் கரடு, வல்லக்குண்டாபுரம், பாலாறுபதி, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல சிறிய கிராமங்கள் அமைந்துள்ளன.
மேலும், அப்பகுதியில், விளைநிலங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத்து சாளைகள் உள்ளன.
இங்கு விவசாயத்துக்கு இணையாக, கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பண்ணை முறையிலும், குறைந்தளவிலும், வெள்ளாடு, செம்மறியாடு, பால் உற்பத்திக்கான மாடுகள், உழவுக்கு பயன்படும் கால்நடைகள் மற்றும் நாட்டுக்கோழிகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன.
இப்பகுதியில், 10 ஆயிரத்துக்கும், கால்நடைகள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அப்பகுதியில், கால்நடைத்துறையின் மருந்தகம், கிளை நிலையம் உட்பட வசதிகள் எதுவும் இல்லை.
எனவே, கால்நடைகளுக்கு நோய்த்தாக்குதல் ஏற்படும் போது, வெகுதொலைவு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது; குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், கால்நடைகள் இறப்பதும் நடக்கிறது.
குறிப்பிட்ட இடைவெளிகளில், கோமாரி நோய் உட்பட நோய்த்தாக்குதல்கள் கட்டுப்படுத்த, தடுப்பூசி போடுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, நடமாடும் கால்நடை மருந்தக திட்டத்தை அப்பகுதியில் செயல்படுத்த வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:
கால்நடைகளின் பிரச்னைகளுக்கு, குறைந்தபட்சம், 10 கி.மீ., துாரத்துக்கு மேலுள்ளதால், கால்நடைகளை அழைத்துச்செல்ல முடிவதில்லை.
எனவே, தனியாரிடம், அதிக செலவழித்து, சினை ஊசி போடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, கால்நடைத்துறை சார்பில், குறிப்பிட்ட இடைவெளிகளில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.